ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல் தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர்.
ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று வருந்துவதில் பயனில்லை.
அபாயகரமான ஒரு போதைப் பழக்கம் - Inhalant Addiction
சிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.
விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான் Whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்
சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.
பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை மீண்டும் மீண்டும் அதையே நுகர தூண்டியுள்ளது. அப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த போதை பழக்கம்..
நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.
ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர் போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச் சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.
தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.
கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.
13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .
பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும் நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் ஆகியோரும் அடிமையாகி உள்ளனர்
இதன் தீமைகள்
* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .
* மனநிலை பாதிப்பு ஏற்படும். இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.
* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன் மற்றும் trichloroethane, நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு whitenar போதைத் தன்மை உண்டாக்கும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன.
* தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .
* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.
* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.
* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
எவ்வாறு கண்டுபிடிக்கலாம்
* அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம்.
* பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால், கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.
இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.
ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும்
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!
என்ன செய்யப் போகிறோம் நாம்??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!
Reference : http://blog.pathfinderclinic.com/2011/03/whitener-addiction-death-by-inhalant.html