Thursday, September 18, 2014

வனதேவதை - சூரியமணி பகத்

இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'மகளிரும் காலநிலை மாற்றமும்' பற்றிய உச்சி மாநாட்டில் பங்கு பெற்றவர்... இவரது  பெயர் சூர்யமணி பகத். இவரது குறிக்கோளும், பணியும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றே, அது என்னவென்றால் காடுகளை பாதுகாப்பது.

இவரது வயது 34, பல வர்ண சேலை, பிளாஸ்டிக் வளையல், நீண்ட கருங்கூந்தலுடன் மிக எளிமையான அமைதியான தெய்வீகக்களை கொண்ட முகத்தை உடையவர்.



இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சோட்டா நகர் ஊரை சேர்ந்தவர். சிறு வயதில் ஏழ்மை மற்றும் தந்தையின் வேலை போனதன் காரணமாக பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.  இவரது குடும்பத்தின் நிலை அறிந்த அந்த ஊரில் உள்ள ஒரு நல்ல மனிதர் இவரது குடும்பத்திற்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி பராமரித்திருக்கிறார்.  அம்மனிதரின் உதவியால் சூர்யா மணியும் மீண்டும் பள்ளி சென்று படித்திருக்கிறார். அப்போதே தான் நன்றாக படிப்பதுடன் அல்லாமல் தன்னை போன்று வறுமை நிலையில் இருக்கும் பிறருக்கும் உதவவேண்டும் என்ற உறுதியை மனதில் விதைத்திருகிறார். கூடவே நமது  இயற்கை வளங்களை உயிராய் மதித்து காக்க வேண்டும் என்று உறுதி பூண்டாராம்.

இவர் சமஸ்க்ருத மொழியில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். இவர் படித்த படிப்பிற்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஆனால் இவர் அதை தவிர்த்து காடுகளை பாதுகாப்பதை குறிகோளாக ஏற்றுள்ளார்.

இவர் சிறு வயதில் காடுகளில் சுள்ளி பொறுக்க சென்றால் அங்குள்ள வன பாதுகாவலர்கள் இவர்களை துஷ்ப்ரயோக சொற்களால் விரட்டுவார்களாம். ஆனால் அதே காவலர்கள் திருட்டுத்தனமாக காட்டில் உள்ள  மரங்களை வெட்டி கள்ள சந்தைக்கு அனுப்புவதை பார்த்துள்ளார்.  பிறகு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து இத்தகைய செயல்களை முற்றிலும் தடுத்துள்ளார்.

இவரது 20 வயதில்   ஜார்கண்ட் பகுதி வன பாதுகாப்பு திட்டத்தில் ஆர்வலராக இணைந்திருக்கிறார்

மேலும் அம்மாநில மக்கள் அனைவரும் நில பட்டா இல்லாதிருப்பது கண்டுபிடித்து அனைவருக்கும் அதனைபெற்று தந்திருக்கிறார் .அரசுக்கு வனம் பாதுகாப்பு பற்றி 40 ற்கும் மேற்பட்ட கூற்றுக்கள் சமர்ப்பித்துள்ளார்.

இவரது முயற்சியால் கிராம மக்கள் தாங்களே எல்லையை  நிர்ணயித்து பழ மரங்கள் மற்றும் பல்லுயிர் பயன்பெறும் தாவரங்களை பயிரிட்டுள்ளார்கள் .இதற்குமுன் அரசு வருவாய் தரும் பயிர்கள் மட்டுமே பயிரிட்டதாம்.

மேலும் இவர் கிராமத்தில் டோரங் எனும் பழங்குடி கலாச்சார மையம் ஒன்றையும் துவக்கி உள்ளார். ஊனின்றி உறக்கமின்றி பல நாட்கள் கிராமபுரத்தில் நெடுந்தொலைவு கால்நடையாக நடந்து மக்களுக்கு காடுகள் அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மாவோயிஸ்ட் கூட்டத்தினரை கூட இவர் கடந்து சென்றுமிருக்கிறார். அவர்களால் தடுத்து நிறுத்தப்படும்போது இக்காரியம் மக்கள் நலனுக்கென கூறுவாராம் .

இவர் கூட்டத்தில் குடி மகன்களின் தொல்லையும் இருக்குமாம். அவர்களிடம் சிறிதும் கோபபடாமல் 'சற்று அமருங்கள் கூட்டம் முடிந்த பின் உங்களுக்கு அருந்த ஏதாவது அளிப்போம்' என்று சொல்லி அவர்களை அமைதி படுத்திவிட்டு இவரது உரையை தொடருவாராம்.

ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் துன்புறுத்தல், மற்றும் கேலி பேச்சு எல்லாம் கடந்து இவர் வந்துள்ளார்.

சில நேரம் காவல் துறையினர் கைது செய்ய வரும்போது எங்களோடு ஜெயிலுக்கு 'ஆடு மாடு பிள்ளைங்கள் எல்லாம் வரும்' என்று சொல்லி அவர்களை மிரட்டி அனுப்பிய நிகழ்வுகளும் உண்டு என்கிறார். இவரது கடும் முயற்சியால் யூகலிப்டஸ் மற்றும் அரபி மரங்களை முற்றாக காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டும் நீரை உறிஞ்சி பிற்கால சந்ததிக்கு பாலைவனத்தை  மட்டுமே பரிசாக அளிக்கக்கூடியவை.

காலநிலை மாற்றம், பாலினம் வனப்பாதுகாப்பு அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக பின்னிபிணைந்தவை என்கிறார் சூர்யமணி பகத். தட்பவெப்ப மாற்றத்தால் மருத்துவ குணம் நிறைந்த சில மரங்கள் கால நேரம் தவறி பூக்கின்றன.

காடுகள் மக்களுக்கு இன்றியமையாத வளங்களை தருகின்றன. ஆறுமாதங்களுக்கு உணவுக்கு பயிர்களை நம்பியிருக்கலாம் அடுத்த ஆறுமாதம் காடுகளே மக்களுக்கு வளங்களால் உதவ முடியும் ஆகவே அவற்றை அழிவில் இருந்து காப்பது நமது கடமை என்கின்றார் இந்த வன தேவதை.

இயற்கை வளங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி காப்பதால் இவரை வன தேவதை என்றழைப்பது பொருத்தமாக இருக்கும் 

Tuesday, September 2, 2014

வாழைத்தண்டில் வீட்டுத்தோட்டம் - புதுமை

தொட்டியில் வீட்டு தோட்டம், பைகளில் தோட்டம், பழைய குழாய்களில் தோட்டம் ,வைக்கோல் பேல்களில் தோட்டம், தேங்காய் நார் கழிவில், பிளாஸ்டிக் பாட்டிலில் மீள் சுழற்சி செய்த பொருட்களில் தோட்டம் இவற்றையெல்லாம் முயற்சித்த மக்கள் அடுத்து வாழை மரத்தின் தண்டு பகுதியிலும் தோட்டம் வளர்த்து இருக்கிறார்கள்.



உகாண்டா நாட்டில் வாழை மரம் அதிக விளைச்சல் தரும் பயிர். அந்நாட்டை சேர்ந்தவர்கள் அறுவடைக்கு பின் வெட்டி சாய்த்த தடித்த மரங்களில் குறுகிய வேர் வளர்ச்சி உள்ள தாவரங்களை வளர்த்து வெற்றி கண்டுள்ளனர் .வாழை மரத்தண்டில் செடி வளர்ப்பதால் அதிக அளவு தண்ணீர் தேவையில்லை மரத்தில் உள்ள நீர்த்தன்மையே  போதுமானது.

மேலும் வாழைத்தண்டில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன இவை வளரும் செடிகளுக்கு சிறந்த ஊட்டசத்தை  அளிக்கும் .

இதில் இயற்கையாகவே நீரை சேமித்து,உட் கிரகித்து வைக்கும் குணம் உள்ளதால் நீர் வீணாகாது, வறண்ட பிரதேசங்களிலும் இம்முறையை  பயன்படுத்தலாம். தோட்டம் போட  வீட்டில் இடம் இல்லை என்ற குறையுமில்லை. நம் நாட்டில் உபயோகமற்ற மீதமுள்ள வீணாகும் மரங்கள் இருந்தால் இப்படி முயற்சிக்கலாம்.

இதற்கு முதலில் படத்தில் உள்ளபடி கொலு படி போன்ற அமைப்பை பழைய ஏணி அல்லது மூங்கில் கட்டைகளை கொண்டு உருவாக்க வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக கட்டைகளால் உருவாக்குவது சிறந்தது.

இது வாழை மரத்தினை தாங்குவதற்கு .தரையில் வெறும் மரத்தை படுத்தவாறு வைத்தால் பூஞ்சை பாக்டீரியா தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு .இதனை தடுக்கத்தான் இந்த படி போன்ற அமைப்பு.

பிறகு நன்கு தடித்த மர தண்டுகளை படி போன்ற அமைப்பில் கிடை மட்டமாக வைக்க வேண்டும். மரதண்டுகளில் மேற்பகுதியில்  கத்தியால் சிறு குழிகளை. 10 முதல் 15 செண்டி மீட்டர் அகலம் அளவு ஏற்படுத்தி அதில் சிறிதளவு கம்போஸ்ட் /கலப்பு உரம் இட்டு நிரப்ப வேண்டும். ஒரு மரத்தண்டில் இரண்டு வரிசைகள் இடலாம்.

இம்முறைக்கு மண் தேவையில்லை தான் ஆனால் வளரும் செடிகளின்  வேர்கள் கீழ்நோக்கி செல்லாதிருக்க சிறிது கம்போஸ்ட் இடுவது நல்லது.


குறுகிய வேர்கள் கொண்ட செடிகளை தேர்வு செய்து அதன் விதைகளை குழிகளில் இட்டு நிரப்ப வேண்டும். உதாரணத்துக்கு பசலை கீரை, வெந்தய கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை இம்முறையில் வளர்க்கலாம்.

இம்முறையில் மரங்களை இரண்டு அல்லது மூன்று முறை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். அதன் பிறகு இந்த மரங்களை துண்டாக வெட்டி இயற்கை உரத்திலும் பயன்படுத்தலாம்.