Tuesday, June 3, 2014

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தீர்வுகள்

ஆண் பெண் இருவரின் 13-19 வயது வரையிலான “டீன்-ஏஜ்’ பருவம் மிகுந்த குழப்பமானது என்பார்கள்.  ஆனால் இது தான் ஒவ்வொருத்தரின் முக்கியமான காலகட்டம். இந்த வயதில் சரியான வழிநடத்துதல் கிடைக்கப் பெற்றவர்கள்  வாழ்வில் சிறந்து விளங்குகிறார்கள் . மற்றவர்களோ திசை மாறி விடுகிறார்கள். டீன்-ஏஜ் பருவத்தில் இருப்பவர்களை  அவர்களின் பெற்றோர்களே புரிந்துக் கொள்வது சிரமம்.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி பெற்றோர் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.



இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆனால் இவர்களின் நலனில் அக்கறை என்பது வெறும் பேச்சளவில் கூட இல்லை . இவர்களின்  உடல்,மன  நலனில் கவனம் வைப்பதன் மூலமே ஒரு நல்ல சமூக கட்டமைப்பு உருவாகும். இப்பருவத்து பெண்களுக்கு சில மன ரீதியிலான, உடல் ரீதியிலான பிரச்சனைகள், மாறுதல்கள் ஏற்படும். அவை எத்தகையவை என்பதை  அவர்களின் பெற்றோர்கள் புரிந்து  அதன் படி நடந்துக் கொள்வது நல்லது.

குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு ஒரு குழந்தை கவனிக்கப்பட்டு வளர்க்கப் பட்டதோ அதை விட இரு மடங்கு கவனம்  டீன் ஏஜ் பெண்ணை வளர்பதிலும் தேவைப்படுகிறது.

* பூப்பெய்துவதில் சில பெண்களுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* டீன்ஏஜ் பெண்களின் மாதவிடாய் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட நிகழலாம். இது குறித்து பெரிதாக பயம் கொள்ள தேவை இல்லை. சரிவிகித ஆரோக்கியமான உணவு அவசியம்.

* மறைவான இடங்களில் முடி வளரத் தொடங்கும், அதை அருவருப்பாக  எண்ணுவார்கள்,  ஹார்மோனின் செயல்பாடு இது என்பதை சொல்லி தெளிவு படுத்தவேண்டும்.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம். பருக்களை கிள்ளுவதன் மூலம் முகத்தில் ஏற்படக்கூடிய புண், தழும்புகளை பற்றி எடுத்துக் கூற வேண்டும். அவை முகத்தை இன்னும் மோசமாக்கி விடும்  என்பதை அழுத்தமாக கூறவேண்டும். பருக்களை எண்ணி கவலையுற்று தங்களின் படிப்பிலும் கவனம் இன்றி மனதை வருத்திக் கொள்ளும் பெண்கள் இன்று  மிக அதிகம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்து கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும். தினமும் உள்ளாடைகளை மாற்றவேண்டும், உடல் உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்வதுடன் நன்கு தோய்த்த உலர்ந்த  உடைகளையே அணிய வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும்.  திடீரென்று ஏற்படும் உடல் உறுப்பு வளர்ச்சியால் உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும், இது இயல்புதான், கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். தவிரவும்  மார்பில் கை வைத்து அழுத்தி பார்த்தால் சில சிறு கட்டி போல தென்படும், இது ஏதோ புற்று நோய் கட்டியாக இருக்குமோ என்று பயந்த சிறு பெண்களும் உண்டு. மார்பகங்களின் வடிவமைபிற்கானவை இவை, கவலைப்படும் படி ஒன்றும் இல்லை என்று புரிய வைக்க வேண்டும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு ஆகியவை மேம்படும் .

* உடை நாகரீகமாக இருப்பதை விட நாகரீகமாக உடை இருக்கலாம் என்பதை வலியுறுத்த வேண்டும். அத்தகைய ஆடைகளையே வாங்கிக் கொடுக்கக்  வேண்டும்.

* வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* பெண்ணின் தாய் தனது பெண்ணுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* பொதுவாக டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் தாயின் அரவணைப்புக்கு ஏங்குவார்கள், அதனால் நீ வளர்ந்துவிட்டாய் என்று கூறி ஒதுக்கி தாய்க்கும் மகளுக்குமான  இடைவெளியை அதிகரித்து விட கூடாது .  சிலர் அம்மாவுடன் தூங்க விரும்புவார்கள், இதை தாய் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு இணைந்து தூங்கும் சமயங்களில் மகளிடம் தாய் மனம் விட்டு பேச ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் , எதை பற்றியும் சந்தேகம் இருந்தால் கேளுமா பதில் சொல்கிறேன் என்று ஊக்கப்படுத்தலாம். கேள்வி கேட்க வைப்பதன் மூலம் மகளின் தற்போதைய மனநிலை நன்கு தெரியவரும். அதற்கேற்றார்ப் போல் ஆலோசனை கொடுத்து மகளை தெளிவு படுத்த முடியும்.

உடல் மாற்றங்கள், ஆண் பெண் நட்பு, காதல் என்று பலவும் உங்கள் பேச்சில் இருக்கலாம், தப்பில்லை.

* டீன் ஏஜ் பருவத்தின் போது தாய்க்கு 45 /46 வயது இருக்கலாம், அந்த வயதில் இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும்  மெனோபாஸ் போன்ற காரணிகளால் பெண்களின் மனநிலை ஒன்றுபோல் இருக்காது, கோபம, எரிச்சல் போன்றவை ஏற்படுவது சகஜம் ஆனால் இதை மகளிடம் காட்டிவிடக் கூடாது.  மகளின் நன்மையை கருத்தில் கொண்டு தங்களின் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.பெண் குழந்தையை வளர்ப்பதில் தாயின் பங்கு, முக்கியத்துவம் அதிகம் என்பதை எல்லா பெற்றோர்களும் புரிந்துக் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment