Sunday, June 15, 2014

தண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus

ஆஸ்பாரகஸ் கிழக்கு மத்தியதரைகடல் பகுதியை சார்ந்த நாடுகளில் மிக பிரபலமான மரக்கறி உணவு. சீனா தாய்லாந்திலும் அதிகமாக உண்ணபடுகின்றது. இப்போது நம்ம இந்தியாவிலும் கிடைக்கின்றதுஆஸ்பரகசில் மூன்று வகை உண்டு

* பச்சை நிற வகை , இது பெருவாரியாக விளையும் வகை

* பழுப்பு வெள்ளை நிற வகை, சற்றுசுவை குறைந்த  தன்மையுள்ளது. ஜெர்மனியில் மிக பிரபலம், எந்த அளவுக்கு பிரபலம் என்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் இந்த ஆஸ்பாரகஸ் அறுவடை செய்யப்படும் கிராமங்களில் திருவிழா நடத்தி அந்த ஊர் அழகிக்கு ASPARAGUS QUEEN என்ற பட்டமும் வழங்கப்படுகின்றது. திருவிழாவின்போது சிறந்த ஆஸ்பரகஸ் விளைவித்த விவசாயிகளுக்கும் பரிசும்  கிடைக்கும்

*கத்திரிபூ /ஊதா நிற ஆஸ்பாரகஸ். இது பழத்தின் சுவை கொண்டது

செங்குத்தாக நிலையாக வளருவதால் இதற்கு ஸ்பியர்ஸ் /ஈட்டி என்ற பெயருமுண்டு

அஸ்பாரகசில் உள்ள பல நன்மை தரும் சத்துக்கள்

மாவுசத்து ------- 4.2 கிராம்
நீர்ச்சத்து ------- 92 %
கொழுப்பு --------0.3 கிராம்
புரதம் -------2.6 கிராம்
கலோரி --------100 கிராம் அளவில் 24 கலோரிகள்

அதிக அளவு இரும்புசத்து மற்றும் தாமிர சத்துக்கள் ஆஸ்பாரகசில் உண்டு.

பொட்டாசியம், தையமின், போலிக் அமிலம், வைட்டமின் A, C, E, K, B6, RIBOFLAVIN ஆகியன இந்த மரக்கறியில் உள்ளன.

- பார்வைக்  குறைபாடுகள் வராமல் காக்கின்றது.

- நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள்.

- ஆஸ்பாரகஸ் எளிதில் சிறுநீர் பிரிவதற்கு உதவுகிறது.

- மேலும் உடலிலுள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் Detoxifying ஏஜெண்டாகவும் பயன்படுகிறது.

- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகின்றது

- இரத்தத்தில் அமிலத்தன்மையை குறைக்கின்றது.

- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றது.

- சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வல்லது.

- இருதய சம்பந்தமான நோய் அண்டாமல் காக்கின்றது.

- புற்றுநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள்.

இது ஒரு சிறந்த மலமிளக்கி. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து ,உணவு ஜீரணமாவதற்கு உதவுகிறது .

சமைக்கும் முன் மேற்புறத் தோலை சீவி எடுத்து பிறகு இதனை நீரில் வேக வைத்தோ ,அல்லது ஆவியில் வேகவைத்தும் மற்றும் பீன்ஸ் போன்ற காய்களை சமைப்பது போலவும் தயாரித்து உண்ணலாம். குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம். 

Friday, June 13, 2014

ஆண்களின் மலட்டுதன்மையை போக்கும் அத்திப்பழம்

அத்திப்பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.அத்திப் பழங்கள் 6 - 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது  Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது.

அத்திப் பழத்தின் சத்துகள்:

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம்-4 கிராம், கால்ஷியம்-200 மி.கி, இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்:

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants  உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.

உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

அத்திப் பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும். அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும். நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும்.

நீரழிவு குணமாகும்:

அத்தி மரத்தை லேசாக கீறினால்  பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

காண அரிதாகிவிட்ட இம்மரத்தை அதிகளவில் விவசாய நிலங்களில் நட்டு வளர்த்து வருவது நலம்.  வீட்டுத்தோட்டத்தில் இடம் இருந்தால் அங்கேயும் வளர்க்கலாம் .

Tuesday, June 10, 2014

இளநரையை கருமையாக்கலாம் - இயற்கை முறை

இளநரை பிரச்சனைக்கு டை அடிக்க தயங்குகிறீர்களா ? இனி தயக்கம் வேண்டாம், இயற்கை முறையில் மிக எளிமையாக இளநரையை கருமையாக மாற்றலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இன்றைய இயந்திர உலகில்  சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.இன்றைய உணவு முறை நாவின் சுவையை மட்டுமே முக்கியமாக கருதி தயாரிக்கப்படுகிறது. அதை தான் நாமும் விரும்பி சாப்பிடுகிறோம். துரித உணவு என்ற பெயரிலும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றையும் உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் உருவாகும் வாயு,  பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது.  எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை  மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

பெரிய நெல்லிக்காய் கொஞ்சம், எலுமிச்சை இலைகள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இரண்டையும் பசும்பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். தலை  முடியை நன்கு பிரித்து விட்டுக் கொண்டு இந்த கலவையை நன்றாக பூசவும்.  ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவேண்டும்.

சில நாட்களில் இளநரை மாறி கருமையாக முடி ஜொலிக்கும்.  மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.

Wednesday, June 4, 2014

Kale - கீரைகளின் அரசி - பலன்கள்

கீரைகள் என்றாலே சத்து டானிக் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும்.  அதிலும் கீரைகளின் ராணி என்று ஒரு கீரையை அழைக்கிறார்கள். அது தான் ஆங்கிலத்தில் Kale என்றும் தமிழில் பரட்டைக் கீரை என்றும் அழைக்கப் படுகிறது.   பார்ப்பதற்கு தலை விரிக் கோலத்துடன் இருப்பதால் இந்த பரட்டை என்ற திருநாமத்தை பெற்றிருக்கலாம்.இதில் காணப்படும் அளவில்லா சத்துக்கள் காரணமாகவே கீரைகளின் ராணி என்ற பெயர் பெற்றுள்ளது. குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை .

உடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இக்கீரை அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும். 

அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் உணவு .ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இரும்புச்சத்து அதிகம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு  இரும்பு சத்து  இதில் இருக்கிறது.

ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு. ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராம தடுக்க கூடியது .

பார்வை தெளிவாக  இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும். அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி, வைட்டமின் A மற்றும் வைட்டமின் K கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கிறது.

பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் c இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது. 

இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை ஒத்திருக்கிறது. இதனை பொரியலாக செய்தும் மற்றும் பச்சை கீரையை அரைத்து ஜூஸ் போலவும் அருந்தலாம்.

தமிழ்நாட்டின் சென்னை தி.நகர் பகுதி சூப்பர் மார்கெட்டுகளில் கிடைகிறது, வாங்கி பயனடையுங்கள்.

Tuesday, June 3, 2014

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தீர்வுகள்

ஆண் பெண் இருவரின் 13-19 வயது வரையிலான “டீன்-ஏஜ்’ பருவம் மிகுந்த குழப்பமானது என்பார்கள்.  ஆனால் இது தான் ஒவ்வொருத்தரின் முக்கியமான காலகட்டம். இந்த வயதில் சரியான வழிநடத்துதல் கிடைக்கப் பெற்றவர்கள்  வாழ்வில் சிறந்து விளங்குகிறார்கள் . மற்றவர்களோ திசை மாறி விடுகிறார்கள். டீன்-ஏஜ் பருவத்தில் இருப்பவர்களை  அவர்களின் பெற்றோர்களே புரிந்துக் கொள்வது சிரமம்.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி பெற்றோர் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆனால் இவர்களின் நலனில் அக்கறை என்பது வெறும் பேச்சளவில் கூட இல்லை . இவர்களின்  உடல்,மன  நலனில் கவனம் வைப்பதன் மூலமே ஒரு நல்ல சமூக கட்டமைப்பு உருவாகும். இப்பருவத்து பெண்களுக்கு சில மன ரீதியிலான, உடல் ரீதியிலான பிரச்சனைகள், மாறுதல்கள் ஏற்படும். அவை எத்தகையவை என்பதை  அவர்களின் பெற்றோர்கள் புரிந்து  அதன் படி நடந்துக் கொள்வது நல்லது.

குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு ஒரு குழந்தை கவனிக்கப்பட்டு வளர்க்கப் பட்டதோ அதை விட இரு மடங்கு கவனம்  டீன் ஏஜ் பெண்ணை வளர்பதிலும் தேவைப்படுகிறது.

* பூப்பெய்துவதில் சில பெண்களுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* டீன்ஏஜ் பெண்களின் மாதவிடாய் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட நிகழலாம். இது குறித்து பெரிதாக பயம் கொள்ள தேவை இல்லை. சரிவிகித ஆரோக்கியமான உணவு அவசியம்.

* மறைவான இடங்களில் முடி வளரத் தொடங்கும், அதை அருவருப்பாக  எண்ணுவார்கள்,  ஹார்மோனின் செயல்பாடு இது என்பதை சொல்லி தெளிவு படுத்தவேண்டும்.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம். பருக்களை கிள்ளுவதன் மூலம் முகத்தில் ஏற்படக்கூடிய புண், தழும்புகளை பற்றி எடுத்துக் கூற வேண்டும். அவை முகத்தை இன்னும் மோசமாக்கி விடும்  என்பதை அழுத்தமாக கூறவேண்டும். பருக்களை எண்ணி கவலையுற்று தங்களின் படிப்பிலும் கவனம் இன்றி மனதை வருத்திக் கொள்ளும் பெண்கள் இன்று  மிக அதிகம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்து கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும். தினமும் உள்ளாடைகளை மாற்றவேண்டும், உடல் உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்வதுடன் நன்கு தோய்த்த உலர்ந்த  உடைகளையே அணிய வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும்.  திடீரென்று ஏற்படும் உடல் உறுப்பு வளர்ச்சியால் உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும், இது இயல்புதான், கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். தவிரவும்  மார்பில் கை வைத்து அழுத்தி பார்த்தால் சில சிறு கட்டி போல தென்படும், இது ஏதோ புற்று நோய் கட்டியாக இருக்குமோ என்று பயந்த சிறு பெண்களும் உண்டு. மார்பகங்களின் வடிவமைபிற்கானவை இவை, கவலைப்படும் படி ஒன்றும் இல்லை என்று புரிய வைக்க வேண்டும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு ஆகியவை மேம்படும் .

* உடை நாகரீகமாக இருப்பதை விட நாகரீகமாக உடை இருக்கலாம் என்பதை வலியுறுத்த வேண்டும். அத்தகைய ஆடைகளையே வாங்கிக் கொடுக்கக்  வேண்டும்.

* வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* பெண்ணின் தாய் தனது பெண்ணுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* பொதுவாக டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் தாயின் அரவணைப்புக்கு ஏங்குவார்கள், அதனால் நீ வளர்ந்துவிட்டாய் என்று கூறி ஒதுக்கி தாய்க்கும் மகளுக்குமான  இடைவெளியை அதிகரித்து விட கூடாது .  சிலர் அம்மாவுடன் தூங்க விரும்புவார்கள், இதை தாய் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு இணைந்து தூங்கும் சமயங்களில் மகளிடம் தாய் மனம் விட்டு பேச ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் , எதை பற்றியும் சந்தேகம் இருந்தால் கேளுமா பதில் சொல்கிறேன் என்று ஊக்கப்படுத்தலாம். கேள்வி கேட்க வைப்பதன் மூலம் மகளின் தற்போதைய மனநிலை நன்கு தெரியவரும். அதற்கேற்றார்ப் போல் ஆலோசனை கொடுத்து மகளை தெளிவு படுத்த முடியும்.

உடல் மாற்றங்கள், ஆண் பெண் நட்பு, காதல் என்று பலவும் உங்கள் பேச்சில் இருக்கலாம், தப்பில்லை.

* டீன் ஏஜ் பருவத்தின் போது தாய்க்கு 45 /46 வயது இருக்கலாம், அந்த வயதில் இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும்  மெனோபாஸ் போன்ற காரணிகளால் பெண்களின் மனநிலை ஒன்றுபோல் இருக்காது, கோபம, எரிச்சல் போன்றவை ஏற்படுவது சகஜம் ஆனால் இதை மகளிடம் காட்டிவிடக் கூடாது.  மகளின் நன்மையை கருத்தில் கொண்டு தங்களின் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.பெண் குழந்தையை வளர்ப்பதில் தாயின் பங்கு, முக்கியத்துவம் அதிகம் என்பதை எல்லா பெற்றோர்களும் புரிந்துக் கொள்ளவேண்டும்.