இன்றைய காலகட்டத்தில் நமது உடலுக்கு சத்து மிக தேவைபடுகிறது. கீரை, காய்கறிகள் அதிகம் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்களும் வலியுறுத்துவார்கள். ஆனால் காய்கறிகளை விட கீரை கிடைப்பது அரிதாகிவிட்டது. காரணம் நீர் பற்றாகுறை. எனவே எளிய முறையில் வீட்டு தோட்டம் போட்டு அதில் நமக்கு தேவையான கீரைகளை பறித்துக் கொள்ளலாம். நட்டு பல மாதங்களை வரை பலன் கொடுக்கக் கூடிய கீரைகள் சில இருக்கின்றன.
பாலக் கீரை

பாலக் கீரை, கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும். இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும். இதுவும் வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப் பாலக்கீரை வளர வளமான மண் தேவை. இது மணலிலும், வண்டல் மண்ணிலும் நன்கு வளரும். இது வளர எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
பாலக்கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை வளரக் கூடியது. தவிர ௦.75 அடி முதல் 1.5 அடி வரை பக்கவாட்டிலும் வளரும். வீட்டில் ஒரு தொட்டியில் இக்கீரையை விதைத்து 3 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது. இதை விதை 10 வது நாளில், இக்கீரை நாற்றுகள் வளரத் தொடங்கும். பின் 30 வது நாளில் இந்த இலைகளைப் பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு அறுவடை 6 அல்லது 8 முறை செய்யலாம். இந்த இலைகளை பூ விடும் முன்பு பறித்துவிட வேண்டும். விதை தேவை என்றால் பூ விட்டு விதை வரும் வரை சில செடிகளை விட்டு வைத்து அதில் இருந்து விதைகளை சேகரித்துக் கொள்ளலாம். பாலக் விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவ குணம்:
பாலக்கீரை தலைவலியைக் குணப்படுத்தும். மூளை வளர்ச்சிக்கு உதவும். குடல்புண்களை குணப்படுத்தும். தலை முடி உதிர்வதையும், வழுக்கையையும் தடுக்கும். இதன் சாறு புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
பருப்புக்கீரை:

இந்தப் பருப்புக்கீரையை வளர்க்கச் செம்மண் நிரம்பிய மண் தொட்டியில் இதன் விதைகளையோ அல்லது இக்கீரைத்தண்டை நட்டோ வளர்க்கலாம். இக்கீரை வளர நன்கு நீர் தேவைப்படும். இக்கீரையின் இலைகள் நீள்வட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பானதாகவும் இருக்கும். இந்தக் கீரைச் செடி நட்டு 20 நாளில் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மாட்டுச்சாணத்தை உரமாகப் பயன்படுத்தினால் நன்கு வளர்ச்சி பெறும். நட்டு ஒரு மாதத்தில் மூன்று முறை அறுவடை செய்து சமைக்கலாம்.
மருத்துவ குணம்:
இக்கீரை கல்லீரல் வீக்கத்தைப் போக்கும், பித்தக்கோளாறு தீர்க்கும். இதன் இலை, விதைகளை அரைத்துப் பூசினால் தீப்புண் குணமாகும். இக்கீரை வயிற்றுக் கிருமிகளை அழிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதோடு, மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும்.
பசலைக் கீரை:

செம்மண், மணல் கலந்த இக்கலவை மண்ணை ஒரு மண் தொட்டியில் வைத்து நிரப்பிக் கொள்ள வேண்டும். இதன் மேற்புறத்தில் சாணத்தைப் பரப்பிவிட்டு பசலைக்கீரைச் செடியினை நட்டு விட வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றி வர வேண்டும். இவ்வாறாகச் செய்து வர 25-ம் நாளில் பசலைக்கீரையைப் பறித்து பயன்படுத்தலாம். அதிலிருந்து 15-வது நாளில் மீண்டும் பறிக்கலாம். மூன்று விரல் அளவு விட்டுக் கீரைகளை செடியில் இருந்து அறுவடை செய்யவேண்டும். இவ்வாறு ஒரு முறை நட்டு விட்டால் இதிலிருந்து 8 முறை அறுவடை செய்து பயன் பெறலாம்.
பசலைக்கீரையில் இருவகை உண்டு. ஒன்று கொடிப்பசலை இன்னொன்று தரைப்பசலை. கொடிப்பசலை பச்சை நிறம் உடையது, இலை பெரியதாக இருக்கும். இது கொடியாகப் படரும். தரைப்பசலை, தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும், பச்சை நிறத்திலும் காணப்படும். இதன் இலை சிறியதாக இருக்கும்.
மருத்துவகுணம்:
பாசிப்பருப்புடன் இக்கீரையை சமைத்து உண்டால் நீர்கடுப்பு நீங்கும். உடலின் சூட்டைக் குறைத்துப் பித்தத்தையும் தணிக்கும். நல்ல பசியைத் தரும். குழந்தைகளின் தேக பலன் வளர்ச்சிக்கு இது நல்ல உணவாகும். தலைவலி, ரத்த சோகையைப் போக்கும், கண்பார்வைப் பொலிவு பெறும்.
மணத்தக்காளி கீரை:

கடைகளில் விற்கும் மணத்தக்காளி விதைகளை வாங்கி உதிர்த்து நன்கு காயவைத்து எடுத்து கொள்ளலாம். தொட்டியில் மொத்தமாக தூவி தண்ணீர் தெளித்து வந்தால் மூன்று நாட்களில் முளைத்து வளர்ந்து வரும். ஓரளவு வளர்ந்ததும் வேருடன் எடுத்து தனி தனி தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டும். இலைகளை சிறு காம்புகளுடன் கிள்ளி பருப்பு சேர்த்து கூட்டாகவோ ,அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment