உணவு வகைகளில் வாசனைக்காகவும், சுவைக்காவும் சேர்க்கப்படும் கருவேப்பிலையை யாரும் பெரிதாக கவனிப்பதில்லை. தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் இனிமேல் இவ்வாறு செய்யாமல் சாப்பிட்டுவிடுவோம்.
கருவேப்பிலையின் குணம் என்பது இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் சேர்ந்த ஒரு கலவை. கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்,புரதம்,இரும்பு,தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ.பி.சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அதிகரிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

"வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூயமருவேறு காந்தளங்கை மாதே உலகிற்கருவேப்பிலை யருந்திக் காண்" என்ற பாடலின மூலம் கருவேப்பிலையினால் குணமாகக் கூடிய நோய்கள எவை என்பதை அறியலாம்.
ஒளடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது. வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.
கண்ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது. மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது.
அரோசிகம் ஏற்பட : எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும்;அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப்போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.
முடி வளர
கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.
கருவேப்பிலை துவையல்
இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி,சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல அரைத்தால் போதும். அடிக்கடி இத்துவையலை சாதத்துடன் கலந்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.
கருவேப்பிலைப் பொடி
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் வத்தல் , பெருங்காயம் இவை அனைத்தையும் தேவையான அளவு எடுத்து நன்கு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு சற்று முன்பாக கருவேப்பிலை இலைகளை சேர்த்து வறுக்கவும். இறக்கிவைத்து ஆறியதும் மிக்சியில் பொடி செய்த்துகொள்ளவேண்டும்.
இந்த பொடியை சூடான சாதத்துடன் சிறிது நெய்/நல்லெண்ணை சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், முடி உதிர்வது குறைந்து முடி நன்கு வளரும். கண் பார்வை தெளிவு பெரும்.
புத்திசுவாதீனம் சரியாக:
சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்த சாப்பிடக் கொடுத்து விடவேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதினம் அடையும் வரை கொடுத்து வரவேண்டும். புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.
கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும்,சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிடவேண்டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.
மருத்துவக் குணங்கள் நிறைந்த கருவேப்பிலையை நம் வீட்டு த்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment