Thursday, April 10, 2014

தொட்டியில் தக்காளி வளர்க்கும் முறை

அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஜன நெருக்கடி மிகுந்த புற நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இடபற்றாகுறை ஆகிய காரணங்களால் வீட்டுத்தோட்டம் போட இயலாத மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் இந்த தொட்டி /கன்டெய்னர் தோட்டம்.  பெரிய களிமண் தொட்டிகள், சிமென்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.


தக்காளி விதைகளை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்  ஆர்கா என்ற ஒரு கலப்பின வகை கடைகளில் கிடைக்கும், இதில் ஒரு பழம் 90 – 100 கிராம் வரை எடையுள்ளவை. செர்ரி தக்காளி என்ற மற்றொரு வகையும் இருக்கிறது, சிறியதாக அதிக அளவில் காய்க்கும். இவை எதிலும் விருப்பம் இல்லை,விதைகள் கிடைக்கவில்லை எனில் நன்கு பழுத்த நாட்டுத் தக்காளியை தண்ணீரில் பிசைந்து விதைகளை தனியாக பிரித்து அதனுடன்  சாம்பல் அல்லது மண் கலந்து காய வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

நடும் முறை 

* ஒரு மண் நிரப்பிய பெரிய தொட்டி அல்லது மண் தரையில் மண்ணை லேசாக கிளறி விட்டு விதைகளை மொத்தமாகத் தூவவேண்டும் , பூவாளி வைத்து தண்ணீர் தெளித்து வர  வேண்டும். செடி ஒரு அடி அளவு உயரம் (தக்காளி நாத்து) வளர்ந்ததும் அவைகளை அப்படியே வேருடன் எடுத்து தனி தனி தொட்டிகளில் நட வேண்டும்.

* களிமண் தொட்டிகள் விரைவில் காயும் தன்மையுடையவை ஆதலால் அவற்றுக்கு ஏதேனும் வர்ணம்  அல்லது வெளிபூச்சு அடிப்பது நல்லது .

*தொட்டி/கண்டெய்னரின் அடிபகுதியில் 1/4 அங்குலம் அளவுள்ள துளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு துளைகள் இருப்பது நல்லது. செடியின் தேவை போக அதிகபடியான நீர் வெளியேற இவை உதவும்.

* தொட்டி/கண்டெய்னரின் உள்ளே துளைகள் போடப்பட்டிருக்கும் இடம் வரை சரளை கற்களை பரப்பவும். அதாவது கற்களால் துளைகள் மூடப்பட வேண்டும்.

* அடுத்ததாக தொட்டியில் 3/4 பாகத்திற்கு மண், மக்கிய உரம் (potting soil ) நிரப்ப வேண்டும். (காய்கறி கழிவுகள், பழக் கழிவுகள், காய்ந்த இலை தளைகளை வைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்)

*தொட்டியில் உள்ள  செடி வேர் பிடித்து  வளர வளர மீதமுள்ள பாகத்தில் மக்கிய உரத்தை இட்டு நிரப்ப அது  வளரும்  தண்டுபகுதியினைத் தாங்கி பிடிக்கும்.

*மக்கிய உரம்,மண்புழு உரம் என இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.

*தக்காளிச் செடிகளை பூச்சிகளிடமிருந்து காக்க தக்காளி செடிகளோடு மூன்று அல்லது நான்கு சாமந்தி செடிகளை நடலாம்.

*தொட்டிச் செடிகளுக்கு சுமார் எட்டுமணி நேரம் சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும்.

 *செடியின் ஒரு கிளையில் இருந்து 45 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி முளைக்கும் மற்ற சிறு கிளைகளை கிள்ளி விட வேண்டும்.

*காய்கள் கொத்தாகத் தொங்கும்போது அவற்றை செடியுடன் கயிற்றால் சுற்றிக் கட்ட வேண்டும் அல்லது தாங்கும் படி மூங்கில் வகை கம்புகளை நட்டு வைக்க வேண்டும் இல்லையென்றால் காய், பழத்தின் பாரம் தாங்காமல் செடி சாய்ந்து விடும்.

* தொட்டிச் செடிகளுக்கு அளவுக்கு அதிகமாக உரமிட்டு நிரப்பக்  கூடாது ..நிலத்தில்  வளரும்போது உரம் பிற இடங்களுக்கு கசிந்து பரவும் ஆனால் தொட்டியில் அத்தகைய வாய்ப்பு இல்லையாதலால் இரண்டு வாரத்துக்கொருமுறை உரம் இடுதல் போதுமானது .

* மேலும் தக்காளி செடி பூ பூக்க துவங்கியதும் உரம் இடுவதை நிறுத்தி விடவேண்டும்.

*ஒரு கைப்பிடியளவு கால்சியம் சத்து உள்ள காய்ந்த எலும்பு /முட்டை ஓடு துகள் போன்றவற்றை மண்ணில்  கலந்து விடலாம் . வேப்பம்புண்ணாக்கு சிறிது போடலாம்.

*எக்காரணம் கொண்டும் இரசாயன உரங்களை தொட்டிச்  செடிகளுக்கு இட வேண்டாம் அவை அதிக உஷ்ணம் ஏற்படுத்தி செடியை அழித்து விடும்.

கோடைக்காலத்தில் தினமும் நீர் ஊற்ற வேண்டும்.

நீர் தொட்டியின் அடிபக்க துளைகள் வழியே வெளியேறும் வரைக்கும் நீர் ஊற்ற வேண்டும். அது போதுமானது .

இந்த தொட்டிகளை  வெறும் தரையில் வைக்காமல் நான்கு செங்கல்களை அடுக்கி அதன்மீது வைக்க வேண்டும் ..இது நீர் வெளியேற மற்றும் தேவையற்ற நத்தை, போன்ற சிறு உயிரினங்கள் , இடுக்குகளில் நுழைந்து பெருகாமல் மற்றும் செடிகளை தாக்காமல் பாதுகாக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் புதிய மண் நிரப்ப வேண்டும் .பழைய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment