Wednesday, April 30, 2014

உடலுக்கு வலிமைத் தரும் சீத்தாப்பழம்

Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

சீத்தாப்பழம் (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.



பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை கொடுக்கக் கூடியது.

இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்திலும் மருத்துவ குணம் நிரம்பி இருக்கிறது. இதில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் இருக்கிறது அதனால் தான் இதன் சுவையில் மிகுந்த இனிப்பு தெரிகிறது.

மருத்துவ பயன்கள்:

* சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

* சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

* முகப் பருக்கள் குணமடைய அதன் மீது இதன் இலையை அரைத்து பூச வேண்டும்.

* விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

* சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

* சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

* தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

*மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

* சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

* சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

Monday, April 28, 2014

வீட்டில் வளர்க்கக் கூடிய கீரை வகைகள்

இன்றைய காலகட்டத்தில் நமது உடலுக்கு சத்து மிக தேவைபடுகிறது. கீரை, காய்கறிகள் அதிகம் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்களும் வலியுறுத்துவார்கள். ஆனால் காய்கறிகளை விட கீரை கிடைப்பது அரிதாகிவிட்டது. காரணம் நீர் பற்றாகுறை. எனவே எளிய முறையில் வீட்டு தோட்டம் போட்டு அதில் நமக்கு தேவையான கீரைகளை பறித்துக் கொள்ளலாம். நட்டு பல மாதங்களை வரை பலன் கொடுக்கக் கூடிய கீரைகள் சில இருக்கின்றன.

பாலக் கீரை



பாலக் கீரை, கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும். இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும். இதுவும் வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப் பாலக்கீரை வளர வளமான மண் தேவை. இது மணலிலும், வண்டல் மண்ணிலும் நன்கு வளரும். இது வளர எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

பாலக்கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை வளரக் கூடியது. தவிர ௦.75 அடி முதல் 1.5 அடி வரை பக்கவாட்டிலும் வளரும். வீட்டில் ஒரு தொட்டியில் இக்கீரையை விதைத்து 3 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது. இதை விதை 10 வது நாளில், இக்கீரை நாற்றுகள் வளரத் தொடங்கும். பின்  30 வது நாளில் இந்த இலைகளைப் பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு அறுவடை 6 அல்லது 8 முறை செய்யலாம். இந்த இலைகளை பூ விடும் முன்பு பறித்துவிட வேண்டும். விதை தேவை என்றால் பூ விட்டு விதை வரும் வரை சில செடிகளை விட்டு வைத்து அதில் இருந்து விதைகளை சேகரித்துக் கொள்ளலாம். பாலக் விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவ குணம்:

பாலக்கீரை தலைவலியைக் குணப்படுத்தும். மூளை வளர்ச்சிக்கு உதவும்.  குடல்புண்களை குணப்படுத்தும். தலை முடி உதிர்வதையும், வழுக்கையையும் தடுக்கும். இதன் சாறு புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பருப்புக்கீரை:



இந்தப் பருப்புக்கீரையை வளர்க்கச் செம்மண் நிரம்பிய மண் தொட்டியில் இதன் விதைகளையோ அல்லது இக்கீரைத்தண்டை நட்டோ வளர்க்கலாம். இக்கீரை வளர நன்கு நீர் தேவைப்படும். இக்கீரையின் இலைகள் நீள்வட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பானதாகவும் இருக்கும். இந்தக் கீரைச் செடி நட்டு  20 நாளில் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மாட்டுச்சாணத்தை உரமாகப் பயன்படுத்தினால் நன்கு வளர்ச்சி பெறும். நட்டு ஒரு மாதத்தில் மூன்று முறை அறுவடை செய்து சமைக்கலாம்.

மருத்துவ குணம்:

இக்கீரை கல்லீரல் வீக்கத்தைப் போக்கும், பித்தக்கோளாறு தீர்க்கும். இதன் இலை, விதைகளை அரைத்துப் பூசினால் தீப்புண் குணமாகும். இக்கீரை வயிற்றுக் கிருமிகளை அழிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதோடு, மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும்.

பசலைக் கீரை:



செம்மண், மணல் கலந்த இக்கலவை மண்ணை ஒரு மண் தொட்டியில் வைத்து நிரப்பிக் கொள்ள வேண்டும். இதன் மேற்புறத்தில் சாணத்தைப் பரப்பிவிட்டு பசலைக்கீரைச் செடியினை நட்டு விட வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றி வர வேண்டும். இவ்வாறாகச் செய்து வர 25-ம் நாளில் பசலைக்கீரையைப் பறித்து பயன்படுத்தலாம். அதிலிருந்து 15-வது நாளில் மீண்டும் பறிக்கலாம்.  மூன்று விரல் அளவு விட்டுக் கீரைகளை செடியில் இருந்து அறுவடை செய்யவேண்டும். இவ்வாறு ஒரு முறை நட்டு விட்டால் இதிலிருந்து 8 முறை அறுவடை  செய்து பயன் பெறலாம்.

பசலைக்கீரையில் இருவகை உண்டு. ஒன்று கொடிப்பசலை இன்னொன்று தரைப்பசலை. கொடிப்பசலை பச்சை நிறம் உடையது, இலை பெரியதாக இருக்கும். இது கொடியாகப் படரும். தரைப்பசலை, தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும், பச்சை நிறத்திலும் காணப்படும். இதன் இலை சிறியதாக இருக்கும்.

மருத்துவகுணம்:

பாசிப்பருப்புடன் இக்கீரையை சமைத்து உண்டால் நீர்கடுப்பு நீங்கும். உடலின் சூட்டைக் குறைத்துப் பித்தத்தையும் தணிக்கும். நல்ல பசியைத் தரும். குழந்தைகளின் தேக பலன் வளர்ச்சிக்கு இது நல்ல உணவாகும். தலைவலி, ரத்த சோகையைப் போக்கும், கண்பார்வைப் பொலிவு பெறும்.

மணத்தக்காளி கீரை:



கடைகளில் விற்கும் மணத்தக்காளி விதைகளை வாங்கி உதிர்த்து நன்கு காயவைத்து எடுத்து கொள்ளலாம். தொட்டியில் மொத்தமாக தூவி தண்ணீர் தெளித்து வந்தால் மூன்று நாட்களில் முளைத்து வளர்ந்து வரும். ஓரளவு வளர்ந்ததும் வேருடன் எடுத்து தனி தனி தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டும். இலைகளை சிறு காம்புகளுடன்  கிள்ளி பருப்பு சேர்த்து கூட்டாகவோ ,அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

Friday, April 25, 2014

கோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கோகோகோலா பானத்தில் ஒரு சிறு அளவு கொகைன் எனும் போதையுண்டாக்கும் பொருள் சேர்க்கபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

எந்த ஒரு உணவுப்பொருள்கள் இத்தகைய போதைப் பொருள் சிறிய அளவில் கலந்து விற்பனைக்கு வரும்போது மக்கள் அதிக ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாங்க முற்படுவார்கள் இதெல்லாம் ஒரு கேவலமான வியாபார தந்திரம்.



1903 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நிறுவனத்தினர்  கொகைன் சேர்ப்பதை நிறுத்திவிட்டனர் .அதற்கு பதில் அதிக அளவில் இனிப்பு சுவையை கூட்டியுள்ளனர் .ஒரு சிறு அலுமினிய டின் கோகோ பானத்தில்  பத்து தேக்கரண்டி சர்க்கரை கலக்கப் படுகிறது என்கிறார்கள். இது ஒரு மனிதன் சராசரியாக அன்றாடம் உட்கொள்ள வேண்டிய அளவை விட 110% அதிகம்.

கிளீவ்லாந்து மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் தெரிவிப்பது என்னவென்றால்,ஒருவர் சராசரியாக தினமும் ஆறு ஸ்பூன்  சர்க்கரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆனால் இப்படி அல்லாமல் தொடர்ந்து கோகோகோலா பானம் அருந்தி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் எடை கூடும்,.உயர் இரத்த அழுத்தம் ,இதய நோய்கள், நீரிழிவு நோய் என அனைத்து அழையா விருந்தாளிகளும் நம்மை நோக்கிப் படையெடுக்கும். மேலும் அளவுக்கு அதிகமான இனிப்பை உடல் தாங்க முடியாமல் தொடர் வாந்தியாக வெளியே தள்ள முற்படும். இதை தவிர்க்க கோகோகோலாவில் பாஸ்பாரிக் அமிலம் சேர்க்கப்படுகின்றது. இது ஒரு வித புளிப்புத் தன்மையினை ஏற்படுத்துவதால் அருந்தும்போது இனிப்பின் சுவை மட்டுப்பட்டு தெரியும்.

இப்படிப்பட்ட பானத்தினால் விரைவில் எலும்பு சம்பந்தமான osteoporosis வியாதிகள் ஏற்படும். பாஸ்பாரிக் அமிலத்தின் குணம் கரைத்து /அரிக்கும் தன்மையுள்ளது . துரு நீக்கியாக பயன்படுகின்றது.

கோகோகோலாவின் பயன்கள் & நன்மைகள்

* துணிகளில் எண்ணெய் பிசுக்கு மற்றும் கறைகளை நீக்க பயன்படுகின்றது.

* துருப்பிடித்த தாழ்ப்பாள் மற்றும் எந்த துருவையும் கோகோகோலாவினை ஸ்பான்ஜால் தொட்டு தேய்க்க துரு நீங்கி விடும் 

* துணிகளில் ஏற்பட்ட இரத்தகறைகளை நீக்க பயன்படுகின்றது .

* கராஜ் ஷெட் தரையில் க்ரீஸ் அழுக்கு பிசுக்கு இருந்தால் கோகோகோலாவை ஊற்றி சிறிது நேரம் ஊறியபின் ஹோஸ் பைப்பினால் நீரூற்றி  கழுவ ...தரை பளபளன்னு ஜொலிக்கும்.

* தோட்டத்தில் நத்தை போன்றவற்றை கட்டுபடுத்த கோக் சிறந்தது இந்த அமிலம் அவற்றை அழித்துவிடும்.

*எலக்ட்ரிக் தண்ணீர் கெட்டிலில் சுண்ணாம்பு  கட்டியாக படிந்திருக்கும் . இதனை வினிகர் கொண்டு சுத்தப்படுத்துவார்கள் .வீட்டில் வினிகர் இல்லையென்றால்  கோகோ கோலா ஊற்றி கழுவினால் சுண்ணாம்பு கரைந்துவிடும் .அடி பிடித்து கருகியப் பாத்திரங்களையும் இம்முறையில் சுத்தம் செய்யலாம்.

* செப்பு நாணயங்கள் மினுமினுக்க, கோக்கினால் கழுவி பாருங்க ..புதிதாய் ஜொலிக்கும்.

* சமையலறை டைல்ஸில் கருப்பு திட்டுக்கள் இருக்கா ? அப்படியென்றால் அந்த இடத்தில் சிறிது கோக்  தெளித்து துடைத்து எடுங்கள். திட்டுகள் மறைந்து விடும்.

* சைனா பீங்கான் கோப்பைகளில் உள்ள அழுக்குக் கறைகளை நீக்க கோக் பயன்படுத்திப் பாருங்கள்.

* தலை முடிக்கு போட்ட ஹேர் டை, கலர்  பிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் . கோக் ஊற்றி தலையை கழுவினால் போதும், பிரச்னை தீர்ந்தது.

* கார் வைபரில் சின்னசின்ன பூச்சிகள் இருக்கிறதா..ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கோக்கை ஊற்றித் தெளிக்க அவை மயங்கி மடிந்து விழும்.

* கார், லாரி என்ஜினை சுத்தம் செய்ய உபயோகப்படுத்தலாம்.

* இந்தியாவில் விவசாயிகள் தங்கள் பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற இதனை பூச்சிக் கொல்லியாக பயன்படுத்துகிறார்கள். விலை குறைவு, பலன் அமோகம என்பதே இதற்கு காரணம்.

* கார்பெட்டில் மார்க்கர் பேனாவின் இங்க் கறை போகவில்லையா  ..கோக் போட்டு தேய்த்து துடைக்க போய்விடும் .

* இறுதியாக மிக முக்கியமான பயன் என்னவென்றால், கழிவறைச் சுத்தப்படுத்த மிக மிக உகந்தது கோக் .

Wednesday, April 23, 2014

ரோஜா குல்கந்த் - இதயத்திற்கு நல்லது

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

Tuesday, April 22, 2014

கொழுப்பைக் கரைக்கும் செம்பருத்தி டீ

செம்பருத்தியில்  பல நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. இவற்றில் ஐந்து இதழ்கள் கொண்ட சிவப்பு நிறம் கொண்ட பூவில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை.



இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மருத்துவக் குணங்கள்:

வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள்  தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

கருப்பப்பை நோய் அனைத்தும் குணமாகும்

செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.வெள்ளைபடுதல் குணமாகும்.

இப்பூக்களில் தங்கச்சத்து நிறைந்திருக்கிறது. இதன் மகரந்தத்தை நீக்கி விட்டே சாப்பிட வேண்டும்  சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து.  சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்.

செம்பருத்தி பூ டானிக்

250 கிராம் செம்பருத்திபூவை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் ஊற்றி  இக்கலவையை காலை வெயிலில் வைக்கவும். பின்னர் எடுத்து கலவையை கலக்கினால் சிவப்பான சாறுவரும் அந்த சாறுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவேண்டும். பின் ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதயம் பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும்.

உடல் உஷ்ணம் குறைய

ஐந்து செம்பருத்திப் பூவை  ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி ஆறவைத்து குடிநீருக்கு பதிலாக குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

வெட்டை நோய் குணமாக

இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.

பேன், பொடுகு தொல்லை நீக்கும்

இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தாலும்  பேன், பொடுகு நீங்கும்.

பலகீனமான குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தையின்  வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

முடி வளர

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து அத்துடன் வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து காயவைத்து எண்ணெயில்  கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்தி டீ

செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ்
தண்ணீர் 1 கப் -150 ml
சர்க்கரை -1 ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் வடிக்கட்டி சர்க்கரை போட்டு குடிக்கவும் .

ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது .

Saturday, April 19, 2014

தேங்காய் நார் கழிவு(Coco Peat) விவசாயம்

மழை  குறைவு காரணமாகப்  பாதிக்கப்படும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கிறது கோகோபீட்(coco peat) எனப்படும் தேங்காய் நார் கழிவு. மண்ணின் வளத்தை கூட்டுவதற்கும் நீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. வெளிநாடுகளில் பெரும் அளவில் இதனை வைத்து விவசாயமும், தோட்டத்தொழிலும் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டுத்தோட்டம் போடுபவர்களும் இதனை விரும்பி வாங்கி உபயோகிகின்றனர்.

மண்ணிற்கு மாற்றாகவும்  பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. எடை குறைவு, இதன் எடையை போல ஏழு மடங்கு நீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றலும்  கொண்டது.



இதன் சிறப்புத்தன்மைகள்

*100%கரிம வளம் நிறைந்தது

*ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கு உறுதுணை

* மண்  இறுக்கத்தை சரிபடுத்துகிறது, நுண்ணுயிர் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டிற்க்கு உதவுகிறது.

* மண் வளத்தை மேம்படுத்துகிறது , களை மற்றும் வேண்டாத பூச்சிகளை கட்டுபடுத்துகிறது .

* அடிக்கடி நீர் ஊற்ற தேவையில்லை.

*உப்பு ,களர் மற்றும் நல்ல நிலம் ஆகிய அனைத்து மண் வகைகளுக்கும் சிறந்தது


அதிக  வெப்பத்தால் நீர் ஆவியாகி நிலம் காய்ந்து போகாமல் இருக்க இதை மேற்போர்வையாக பரப்பி விடலாம். ஊற்றப்பட்ட நீர் அப்படியே தக்கவைக்கபடுகிறது.

* * *
தயாரிப்பு

தேங்காய் நாரினை அப்படியே பயன்படுத்தக்கூடாது அதனை மக்க வைத்து தான் பயன்படுத்த வேண்டும் .கயிறு தயாரிக்கும் ஆலைகளில் கிடைக்கும் இதன் கழிவுகளை சேகரித்து வைத்து பிறகு அதனை உரமாக பயன்படுத்தலாம் .

Coco Peat கடைகளில் கிடைக்கிறது. தேங்காய் நார் கழிவு துகள்களாக மாற்றப்பட்டு செவ்வக வடிவிலோ வட்ட வடிவிலோ இறுக்கமாக தட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இதனை வாங்கி நீரில் ஊறவைத்தால் அது நன்கு ஊறி தூளாகிவிடும். இத்துடன் மண்புழு உரம், செம்மண்(தேவைபட்டால்), இயற்கை கழிவு உரம்,தேயிலை கழிவுத்தூள்  ஆகியவற்றை கலந்து தொட்டியிலிட்டு செடிகளை வளர்க்கலாம்.

Friday, April 18, 2014

முடி வளர, கண் பார்வை தெளிவாக கருவேப்பிலை சாப்பிடுங்க

உணவு வகைகளில் வாசனைக்காகவும், சுவைக்காவும் சேர்க்கப்படும் கருவேப்பிலையை யாரும் பெரிதாக கவனிப்பதில்லை. தூக்கி போட்டுவிடுவோம். ஆனால் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் இனிமேல் இவ்வாறு செய்யாமல் சாப்பிட்டுவிடுவோம்.

கருவேப்பிலையின் குணம் என்பது இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் சேர்ந்த ஒரு கலவை. கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்,புரதம்,இரும்பு,தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ.பி.சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன.  இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அதிகரிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.



"வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூயமருவேறு காந்தளங்கை மாதே உலகிற்கருவேப்பிலை யருந்திக் காண்" என்ற பாடலின மூலம் கருவேப்பிலையினால் குணமாகக் கூடிய நோய்கள எவை என்பதை அறியலாம்.

ஒளடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது. வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.

கண்ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது. மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது.

அரோசிகம் ஏற்பட : எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும்;அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப்போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

முடி வளர

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

கருவேப்பிலை துவையல்

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி,சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல அரைத்தால் போதும். அடிக்கடி இத்துவையலை சாதத்துடன் கலந்துச் சாப்பிட்டு வந்தால்  எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.
கருவேப்பிலைப் பொடி

உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, மிளகாய் வத்தல் , பெருங்காயம் இவை அனைத்தையும் தேவையான அளவு எடுத்து நன்கு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு சற்று முன்பாக கருவேப்பிலை இலைகளை சேர்த்து வறுக்கவும். இறக்கிவைத்து ஆறியதும் மிக்சியில் பொடி செய்த்துகொள்ளவேண்டும்.

இந்த பொடியை சூடான சாதத்துடன் சிறிது நெய்/நல்லெண்ணை  சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், முடி உதிர்வது குறைந்து முடி நன்கு வளரும். கண் பார்வை தெளிவு பெரும்.

புத்திசுவாதீனம் சரியாக:

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்த சாப்பிடக் கொடுத்து விடவேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதினம் அடையும் வரை கொடுத்து வரவேண்டும். புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும்,சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிடவேண்டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.
மருத்துவக்  குணங்கள் நிறைந்த கருவேப்பிலையை நம் வீட்டு த்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டும்.

Wednesday, April 16, 2014

வீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பும், அதன் பயன்களும்

மூலிகை குணமுள்ளவைகளை கடையில் மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் அங்கிருந்து எடுத்து சமைத்து உண்பதை  விட நம் வீட்டிலேயே அவ்வபோது புதிதாக பறித்து பயன்படுத்துவது மிகுந்த பயனளிக்கும் . சத்துக்கள் வீணாகாது. அதிலும் புதினா மிக சுலபமாக வரும் ஒரு மூலிகை தாவரமாகும்.  புதினா வளர சிறிய தொட்டி இருந்தாலும் போதுமானது. 



ஒரு தொட்டியில் மணல் கலந்த செம்மண்ணை இயற்கை உரம் அல்லது சாண வரட்டியை தூள செய்து , கலந்து நிரப்ப வேண்டும். அதில் தண்ணீர் தெளித்து கடையில் வாங்கிய புதினா தண்டுகளை  ஊன்ற வேண்டும்.  வேர் பிடித்து வளரும் வரை தண்ணீரை நன்கு தெளிக்க வேண்டும்.  பின் இரண்டு நாளுக்கு ஒரு முறை நீர் ஊற்றினால் போதுமானது.  45 வது நாளில் புதினா நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும்.  புதினா வேரிலிருந்து 3 செ.மீ விட்டு, 25-30 செ.மீ நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். இதைத் தொடர்ந்து அறுவடையை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை, மாலை வேளைகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும் .

இது வளர மித வெப்பம் தேவை. டிசம்பர் மாதத்தில் இவை நன்கு வளரும் தன்மை கொண்டது. கோடைகாலத்தில் இரு வேலை தண்ணீர் ஊற்றவும். ஒரு முறை நட்ட செடிகள் குறைந்தது  3 ஆண்டுவரை பலன் தரும்.

மருத்துவகுணம்

புதினா மிக சிறந்த ஒரு  மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவில் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். அப்படி இல்லாமல் தொடர்ந்து இதனை உணவுடன் சேர்த்துவந்தால் மிகுந்த பயன் கிடைக்கும்.

நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின் ஏ, கால்சியம், நார்ச்சத்து எனப் பல சத்து நிறைந்த கீரையாகும். இது அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியைத் தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனை தீரும். தவிர மஞ்சள்காமாலை, வாதம், ரத்தசோகை, நரம்பு தளர்ச்சிக்குச் சிறந்த மருந்தாகும்.

Tuesday, April 15, 2014

முகத்திற்கு வசீகர அழகைக் கொடுக்கும் சீமைச்சாமந்தி டீ

உடல், மனம் சோர்ந்தால் உடனே நாம் தேடுவது சூடாக ஒரு  கப் டீ . புத்துணர்ச்சி கொடுப்பதில் தேநீர்க்கு தனி இடம் உண்டு. பலவகை தேநீர்கள் இருக்கின்றன அதிலும் சீமைச்சாமந்தி தேநீர் வெளிநாட்டவரால் மிகவும்  விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. சரும அழகை மேம்படுத்தி வசீகரிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.



சீமைச்சாமந்தி என்பது டெய்சி வகையை சேர்ந்து ஒரு மலர். நடுபகுதி மஞ்சள் நிறத்துடனும் அதனை சுற்றி அழகிய வெண்ணிற இதழ்களைக் கொண்டது.  ஆசியா ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா  ஆகிய நாடுகளில் இவை கோடைகாலத்தில் அழகாக  பூத்துக்குலுங்கும்.

இந்த சீமைச்சாமந்தி பூக்களை பறித்து காயவைத்து தூளாக்கி அதில்  இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது.

சென்னையில் பல கடைகளில் இந்த சீமைச்சாமந்தி /கமொமைல் மூலிகை  தனியாகவோ அல்லது  பிற மூலிகைகளுடன் கலந்தோ விற்கப்படுகின்றது. தேநீராகவும் கிடைக்கிறது.

Pure Chamomile தேனீர் மிக சிறந்தது. இதனை வெறும் சுடுநீரில் அப்படியே போட்டு அருந்த வேண்டும். பால், சர்க்கரை எதையும் சேர்க்கக்கூடாது .நன்கு கொதித்த தண்ணீரில் இந்த தேனீர் பாக்கெட்டை போட்டவுடன் சிறிது நேரத்தில்

தங்க நிறமுள்ள தேனீர் கிடைக்கும். இது ANTI OXIDANTS நிறைந்துள்ள ஒரு பானம்.

சீமைச்சாமந்தி மூலிகை தேனீர் அருந்துவதின்  நன்மைகள்

* மாதவிலக்கு கோளாறுகளை  குணப்படுத்தவும் ஜலதோஷம் நீரிழிவு சம்பந்தமான நோய்களுக்கும் இந்த மலர்களை ஜப்பானியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

* இது மன அழுத்தத்தை குறைக்கும் .

* நிம்மதியான உறக்கம் வர வேண்டுமா ? தூங்க செல்லும்முன் ஒரு கோப்பை இந்த தேனீர் அருந்தினால் போதும். மன உளைச்சல் ,படபடப்பு நீங்கி நிம்மதியா தூங்கலாம்.

* ஒரு கோப்பை சுடு நீர் அருந்துவதை விட ஒரு கோப்பை கமொமைல் தேநீர்  அருந்துவதால் அதிக நன்மை பயக்கும். இந்த தேநீரில் ஆவி பிடிப்பது ஜலதோஷத்துக்கு சிறந்த நிவாரணி.

* ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவிற்கு இது உகந்தது . அஜீரணம், குடல் உபாதைகளுக்கு சிறந்த தீர்வு ,

* மாதவிலக்கின் போது  ஏற்படும் வயிறு வலி நீங்க இந்த தேனீர் சிறந்தது.

* கமொமைல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்   ஆலோசனையுடன் ஒப்புதல் பெற்றபின்னர் அருந்தவும் .

* மேலும் இதை அருந்தியவுடன் தூங்கம் வரும் என்பதால்  ஆதலால் வாகனங்களை ஓட்டும் முன்னர் அருந்த வேண்டாம். நோயாளிகள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே அருந்தவும் .

* அழகு பராமரிப்பில் மற்றும் தோலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு சீமை சாமந்தி அதிகம் பயன்படுகின்றது  .

* இந்த சீமைச்சாமந்தி பருக்கள் மற்றும் தோலில் ஏற்படும் புண்களை ஆற்றும் குணமுள்ளது 

* தோலை சுத்தபடுத்தி முகத்துக்கு வசீகரம் தரவல்லது .

இது ஒரு சிறந்த கிருமி நாசினி சிறு வெட்டுகாயங்களுக்கு ,கோடைகாலத்தில் ஏற்படும் கருப்பு திட்டுகளுக்கு ,மற்றும் தோல் அரிப்பு SUN BURN போக்குவதற்கு  பயன்படுத்தலாம் ..

* தினமும் இந்த தேனீரை கொண்டு முகத்தை கழுவினால் முகம் பளபளப்புடன் இளமைதோற்றத்துடன் இருக்கும் 

* இயற்கையாக சருமத்துக்கு ப்ளீச் (BLEACH ) செய்ய இதனை பயன்படுத்தலாம்.செயற்கை ப்ளீச் பயன்படுவதில் உள்ள பக்க விளைவுகள் இதில் இல்லை

* இந்த தேனீரை முகம் மற்றும் கூந்தலில் கழுவும்போதும் ,அலசும்போதும்  பயன்படுத்தினால் இயற்கையாகமெல்லிய தங்க நிறம் கிடைக்கும்.

* உறக்கமின்மையாலும் அதிக களைப்பினாலும் கண்களின் கீழே கரு வளையம் தோன்றும் ..அந்த கரு வளையத்தை நீக்க .இந்த தேனீரை ஐஸ் கியூப்களாக்கி அவற்றை களைப்படைந்த கண்களின் மேலே சிறிது நேரம் வைக்கலாம்.

* பொடுகு தொல்லைக்கும் இந்த கமொமைல் சிறந்த நிவாரணி. இந்த தேனிரினால் தலையை அலசி வர பொடுகு மற்றும் அரிப்பு நீங்கும்.

* சிறு குழந்தைகளுக்கு Diaper அணிவதால் ஏற்படும் nappy rash ஏற்பட்டால் இந்த தேனீரை பருத்தி துணியால் தொட்டு துடைக்க அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும் .

*தினமும் குளிக்கும்போது இந்த தேனீரை தயாரித்து நீருடன் கலந்து குளிக்கலாம்.சருமத்தில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்த இது உதவுகிறது.

எந்த மூலிகை தேனீர் அருந்துவதாக இருந்தாலும் அதற்கு முன் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்றபின்னரே பயன்படுத்தவும் .

பூரான் கடித்த விஷம் நீங்க இயற்கை வைத்தியம்

குழந்தைகளை சிறு பூச்சிகள் கடிப்பது சகஜம் என்றாலும் கடித்தது எந்த பூச்சி என்று தெரிந்தால் அதற்கு தகுந்த வைத்தியம் செய்து கொள்ள முடியும். அதிலும் பூரான் கடியை  சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.



கடித்த இடத்தின் தோல் தடித்து சிகப்பு நிறத்தில் இருக்கும். அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.  ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும். தலைவலிப்பது போல இருக்கும். வாந்தி ஏற்படும்.

பூரான் கடி என்று அலட்சியம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்லவேண்டும், அதற்கு முன் முதலுதவி செய்வது நல்லது.
பூரான் கடித்த இடத்தில் உடனடியாக ஆன்டிசெப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் இதனால் அரிப்பு கட்டுப்படும். கடிபட்ட இடத்தில் சூடாக இருக்கும். வலியும் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் குளிர்ச்சியாகி வலி கட்டுப்படும்.

பனை வெல்லம்

பூரான் கடித்தது என்று தெரிந்ததும் குழந்தைகளுக்கு பனைவெல்லத்தை(கருப்பட்டி) கரைத்து ஒரு சங்கு கொடுக்கலாம். பெரியவர்கள் என்றால்  பனைவெல்லத்தை (கருப்பட்டி) அப்படியே கடித்து சாப்பிடவேண்டும்.  அதேபோல் அரிக்கும் இடத்தில் ஹைடிரோ கார்டிசோன் கிரீம் தடவ அரிப்பு மறையும். தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக சிறிது மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். அதிக மண்ணெண்ணெயை விட்டால் தோல் பொத்துவிடும் அதனால் கவனத்துடன் செயல் படவேண்டும்.

குப்பைமேனி இலை

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.

குப்பைமேனி இலையையும் உப்பையும் சரி அளவாக 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும்.

ஊமத்தம் இலை

பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி பலமாதமாகி விட்டால் ஊமத்த தைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும். ஊமத்தம் செடியின் இலை  நூறு கிராம் எடுத்து நன்றாக இடித்து கால்லிட்டர் நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறவைத்து  குளிக்கவேண்டும்.  தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

Friday, April 11, 2014

தோல் சுருக்கத்தை நீக்கி இளமையாக்கும் அவோகேடோ பழம்

அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. என்னென்ன என்பதை இங்கே காணலாம். 



* முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாடுகளை நீக்கவும் கட்டுபடுத்தவும் இப்பழம் உதவுகிறது

* இப்பழத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளதால் எடை குறைப்பில் அதிக பங்கு வகிக்கிறது

* இதயத்திற்கு ஏற்றது. இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க காரணமான பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை இப் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு இப் பழம் உகந்தது .

* நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது. வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது . இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. 

* வாழைப்பழத்தை விட 35%அதிக அளவு பொட்டாசியம் சத்து இதிலுள்ளது. வயதான தோற்றத்தை தடுக்க, வறட்சியான சருமத்தை நீக்க, சருமத்தை மென்மையாக்க பெரிதும் உதவுகிறது. 

* பல்வேறு ஆய்வுகளில், பழங்களிலேயே சருமத்திற்கு சிறந்த பழம் வெண்ணெய் பழம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பழத்தில் steroline என்னும் புரதசத்து அதிக அளவில் உள்ளது. இந்த ஸ்டெரோலின் அளவு சருமத்தில் குறையும்போது , வயதான தோற்றம், தோலில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

வெண்ணெய் பழத்தை பொதுவாக அப்படியே சாப்பிடலாம். மற்றும் மில்க் ஷேக் மற்றும் ஐஸ் க்ரீம்களிலும் சேர்த்து உண்ணலாம்.

அவோகேடோ ஜூஸ்:

இந்த வெண்ணெய் பழத்தின் ஜூஸ் சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும். எனவே தினமும் ஒரு டம்ளர் அவோகேடோ ஜூஸ் குடித்தால், சருமம் அழகாக, சுருக்கமின்றி காணப்படும்.

நம் நாட்டில் இப்பழமரம் குன்னூர் பகுதி கொலக்கம்பை, முசாபுரி, கரும்பாலம், தூதூர்மட்டம், சுல்தான எஸ்டேட், உலிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நடவு செய்கின்றனர் . ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இதன் சீசன் துவங்கும். அறுவடை செய்யப்பட்டபின் இப்பழம் ஊட்டி, குன்னூர், மேட்டுபாளையம் ஆகிய மண்டிகளுக்கு கொண்டு விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஊட்டி, குன்னூர் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள் முன்பு இப்பழம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Thursday, April 10, 2014

தொட்டியில் தக்காளி வளர்க்கும் முறை

அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஜன நெருக்கடி மிகுந்த புற நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இடபற்றாகுறை ஆகிய காரணங்களால் வீட்டுத்தோட்டம் போட இயலாத மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம் இந்த தொட்டி /கன்டெய்னர் தோட்டம்.  பெரிய களிமண் தொட்டிகள், சிமென்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.


தக்காளி விதைகளை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்  ஆர்கா என்ற ஒரு கலப்பின வகை கடைகளில் கிடைக்கும், இதில் ஒரு பழம் 90 – 100 கிராம் வரை எடையுள்ளவை. செர்ரி தக்காளி என்ற மற்றொரு வகையும் இருக்கிறது, சிறியதாக அதிக அளவில் காய்க்கும். இவை எதிலும் விருப்பம் இல்லை,விதைகள் கிடைக்கவில்லை எனில் நன்கு பழுத்த நாட்டுத் தக்காளியை தண்ணீரில் பிசைந்து விதைகளை தனியாக பிரித்து அதனுடன்  சாம்பல் அல்லது மண் கலந்து காய வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

நடும் முறை 

* ஒரு மண் நிரப்பிய பெரிய தொட்டி அல்லது மண் தரையில் மண்ணை லேசாக கிளறி விட்டு விதைகளை மொத்தமாகத் தூவவேண்டும் , பூவாளி வைத்து தண்ணீர் தெளித்து வர  வேண்டும். செடி ஒரு அடி அளவு உயரம் (தக்காளி நாத்து) வளர்ந்ததும் அவைகளை அப்படியே வேருடன் எடுத்து தனி தனி தொட்டிகளில் நட வேண்டும்.

* களிமண் தொட்டிகள் விரைவில் காயும் தன்மையுடையவை ஆதலால் அவற்றுக்கு ஏதேனும் வர்ணம்  அல்லது வெளிபூச்சு அடிப்பது நல்லது .

*தொட்டி/கண்டெய்னரின் அடிபகுதியில் 1/4 அங்குலம் அளவுள்ள துளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு துளைகள் இருப்பது நல்லது. செடியின் தேவை போக அதிகபடியான நீர் வெளியேற இவை உதவும்.

* தொட்டி/கண்டெய்னரின் உள்ளே துளைகள் போடப்பட்டிருக்கும் இடம் வரை சரளை கற்களை பரப்பவும். அதாவது கற்களால் துளைகள் மூடப்பட வேண்டும்.

* அடுத்ததாக தொட்டியில் 3/4 பாகத்திற்கு மண், மக்கிய உரம் (potting soil ) நிரப்ப வேண்டும். (காய்கறி கழிவுகள், பழக் கழிவுகள், காய்ந்த இலை தளைகளை வைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்)

*தொட்டியில் உள்ள  செடி வேர் பிடித்து  வளர வளர மீதமுள்ள பாகத்தில் மக்கிய உரத்தை இட்டு நிரப்ப அது  வளரும்  தண்டுபகுதியினைத் தாங்கி பிடிக்கும்.

*மக்கிய உரம்,மண்புழு உரம் என இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.

*தக்காளிச் செடிகளை பூச்சிகளிடமிருந்து காக்க தக்காளி செடிகளோடு மூன்று அல்லது நான்கு சாமந்தி செடிகளை நடலாம்.

*தொட்டிச் செடிகளுக்கு சுமார் எட்டுமணி நேரம் சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும்.

 *செடியின் ஒரு கிளையில் இருந்து 45 டிகிரி கோணத்தில் மேல் நோக்கி முளைக்கும் மற்ற சிறு கிளைகளை கிள்ளி விட வேண்டும்.

*காய்கள் கொத்தாகத் தொங்கும்போது அவற்றை செடியுடன் கயிற்றால் சுற்றிக் கட்ட வேண்டும் அல்லது தாங்கும் படி மூங்கில் வகை கம்புகளை நட்டு வைக்க வேண்டும் இல்லையென்றால் காய், பழத்தின் பாரம் தாங்காமல் செடி சாய்ந்து விடும்.

* தொட்டிச் செடிகளுக்கு அளவுக்கு அதிகமாக உரமிட்டு நிரப்பக்  கூடாது ..நிலத்தில்  வளரும்போது உரம் பிற இடங்களுக்கு கசிந்து பரவும் ஆனால் தொட்டியில் அத்தகைய வாய்ப்பு இல்லையாதலால் இரண்டு வாரத்துக்கொருமுறை உரம் இடுதல் போதுமானது .

* மேலும் தக்காளி செடி பூ பூக்க துவங்கியதும் உரம் இடுவதை நிறுத்தி விடவேண்டும்.

*ஒரு கைப்பிடியளவு கால்சியம் சத்து உள்ள காய்ந்த எலும்பு /முட்டை ஓடு துகள் போன்றவற்றை மண்ணில்  கலந்து விடலாம் . வேப்பம்புண்ணாக்கு சிறிது போடலாம்.

*எக்காரணம் கொண்டும் இரசாயன உரங்களை தொட்டிச்  செடிகளுக்கு இட வேண்டாம் அவை அதிக உஷ்ணம் ஏற்படுத்தி செடியை அழித்து விடும்.

கோடைக்காலத்தில் தினமும் நீர் ஊற்ற வேண்டும்.

நீர் தொட்டியின் அடிபக்க துளைகள் வழியே வெளியேறும் வரைக்கும் நீர் ஊற்ற வேண்டும். அது போதுமானது .

இந்த தொட்டிகளை  வெறும் தரையில் வைக்காமல் நான்கு செங்கல்களை அடுக்கி அதன்மீது வைக்க வேண்டும் ..இது நீர் வெளியேற மற்றும் தேவையற்ற நத்தை, போன்ற சிறு உயிரினங்கள் , இடுக்குகளில் நுழைந்து பெருகாமல் மற்றும் செடிகளை தாக்காமல் பாதுகாக்கும்.

ஒவ்வோர் ஆண்டும் புதிய மண் நிரப்ப வேண்டும் .பழைய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.

Tuesday, April 8, 2014

மழை நீர் சேமிக்க மற்றும் இயற்கை உரம் இரண்டிற்கும் ஒரு எளிய வழிமுறை

'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்பதை  நன்கு தெரிந்தவர்கள் தான் சொல்கிறார்கள்  மூன்றாம் உலக யுத்தம் தண்ணீருக்காக இருக்கும் என்று. மழை குறைந்துவிட்டது என்று ஆதங்கப்படத்தான் தெரியுமே தவிர பெய்யும் சிறிது மழையையும் சேமிக்க தெரியாதவர்கள்  தான் இன்றைய மக்கள்.



பூமியில் விழும் மழையில் ஒரு பகுதி நிலம் உறிஞ்சியது போக மீதம் அப்படியே கடலுக்குள் சென்று எதற்கும் பிரயோசனம் இன்றி வீணாக கடல் நீரில் கலந்து விடுகிறது.

இவ்வாறு கடலில் கலக்கும்  நீரை நிலத்திலேயே சேமித்து நல்முறையில் பயன்படுத்த ஒரு எளிய வழி முறையை இந்தோனேஷியாவில் .Dr. Kamir Pariadin Broto, என்பவர் கண்டுப்பிடித்திருக்கிறார் .

* நீரானது நிலத்தை/மண்ணை  சென்றடையாதவாறு  கான்க்ரீட் தளத்தால் மூடி வைக்கிறோம். கட்டிடம் எழுப்பும்போது கொஞ்சமேனும் கருணை வைத்து சில பகுதிகளை ஒதுக்கி வைத்து மழை நீர் நிலத்தடியை சென்றடையச் செய்யுங்கள்.

மழை நீர் நிலத்தின் மேற்பரப்பில் விழும்போது உடனே நிலமானது அதனை உறிஞ்சாது அதற்கென இந்த உறிஞ்சும் துவாரங்களை ஏற்படுத்த வேண்டும்

* சுமார் 10 cm அகலம் மற்றும் 80-100 cm ஆழம் இருக்குமாறு துவாரங்கள் தோண்ட வேண்டும் ஜாவாவில் இதற்கு ஸ்பெஷல் உபகரணம் பயன்படுத்துகிறார்கள். நாம் கடப்பாரை போன்றதை பயன்படுதினால் போதும் .

* வாகன நிறுத்துமிடம், கட்டிடங்களின் பின்புறம்/நீர்பாசன வசதியற்ற எந்த இடத்திலும் இவ்வாறான துவாரங்கள் ஏற்படுத்தலாம் .

* இத் துவாரங்களில் இயற்கை, உயிர்கழிவுகள் ஆன காய்ந்த இலை, அழுகிய பழங்கள் (compost) ஆகியவற்றை நிரப்பிமூட வேண்டும். இவற்றை மழை இல்லாத நாட்களில் இயற்கை உரமாக எடுத்து பயன்படுத்தலாம் .

* இந்த துவாரங்களில் எறும்புகள் ,மண்புழுக்கள் இன்னபிற நுண்ணியிரிகள் தாமாக வளர்ந்து நிலத்தடியை வளப்படுத்தும் ..இதனால் நீர் வேகமா நிலத்தில் உறிஞ்சப்படும். முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது

* மேற்புறம் 10 cm ஆக இருப்பதால் கண்டிப்பாக மேற்புரத்தை கம்பி வலையால் மூடி பாதுகாக்கவேண்டும். இலை, காய்ந்த சருகுகளால், மற்றும் organic கழிவுகளால் நிரப்பிக் கொண்டே இருக்க  வேண்டும்

* அணில்கள், பறவைகள் போன்ற சிறு உயிரினங்கள் இதில் விழுந்து விட இடம் கொடுக்கக் கூடாது .

* இந்த துவாரத்தில் இலை மற்றும் இயற்கை கழிவுகள் மட்டுமே செல்லுமாறு பார்க்க வேண்டும். பிளாஸ்டிக், சிகரெட் பில்டர் ஆகிய காலத்தால் அழிக்க முடியாதவை இங்கு சேர்ந்தால் இந்த துவாரத்தால் ஒரு பயனும் இல்லை

Monday, April 7, 2014

வழுக்கைத் தலைப் பிரச்சனைக்கு சுலபத் தீர்வு

இன்றைய உணவு பழக்க வழக்கம், சுற்றுப்புறச்  சூழல் போன்றவற்றால் நமது தலை முடி அதிக பாதிப்படைகிறது. இளைஞர்களில் பலர் வழுக்கைத் தலை பிரச்சனையுடன் அவதி படுகின்றனர்.   செயற்கை முறைகள் பலவற்றை  மேற்கொண்டு மேலும் தலை முடியை இழக்கவே செய்கின்றனர். ஒரு இடத்தில் முடி விழுந்து விட்டால் மீண்டும் முளைக்காது என்ற கருத்து சரியல்ல. இயற்கை முறையில் சிகிச்சை மேற்கொண்டால் கண்டிப்பாக முடி முளைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்


முடி கொட்டுவதற்கு  தலையில் போதிய ரத்த ஓட்டம் இல்லாததும், பொடுகு, அதிக வியர்வை , அழுக்கு, உடலில் சத்து குறைவு, பராமரிப்பு இன்மை போன்றவை காரணமாகும்.

இயற்கை வழிமுறைகள்  

* சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) சிறிது எடுத்து இடித்து கசக்கி அதன் சாறை வழுக்கை விழுந்த இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும். இதன் பிறகு வேண்டுமானால் அந்த இடத்தில் சிறிது தேன் தேய்க்கலாம்.

* துவரம்பருப்பை அரைத்து தலையில் தடவி ஊறிய பிறகு குளிக்க வேண்டும்.

* எலுமிச்சம் பழ விதைகள், மிளகு இரண்டையும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தலையில் தடவ வேண்டும். எலுமிச்சையில் அமிலத்தன்மை இருப்பதால் சிறிது எரிச்சல் இருக்கும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை வளரச் செய்யும். வாரத்தில் இரண்டு நாட்கள் தவறாது செய்து வர வேண்டும்.

* அதிமதுரத்தை அரைத்து அதன் கூட பால், சிறிது குங்குமப் பூவை சேர்த்து வழுக்கை விழுந்த இடத்தில் தடவ வேண்டும். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

முடி அடர்த்தியாக வளர 

* விளக்கெண்ணையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்து கொண்டு தினமும் தேய்த்து வர வேண்டும்.

* தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறை கலந்து , தலையில் தேய்த்து குளித்து வர முடி நன்கு வளரும்.

* உளுந்தையும் வெந்தயத்தையும் ஊறவைத்து அரைத்து தேய்த்து குளிக்க வேண்டும் , முடி நீளமாக வளருவதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.

இப்படி பல முறைகள் இருக்கிறது. எது ஒன்றையும் ஒரு முறை மட்டும் முயற்சி செய்து பார்ப்பதுடன் நின்றுவிடாமல் தொடர்ந்து கையாண்டால் வழுக்கை  தலை என்பது இனி இல்லை என்றாகிவிடும்.

Wednesday, April 2, 2014

பாகற்காயின் மருத்துவப் பலன்கள்

பாகற்காயின் பிறப்பிடம் தென்கிழக்கு ஆசியா ஆசியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் காய் இது. மிகுந்த மருத்துவ குணங்களை கொண்ட இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், குறைந்த அளவு கொழுப்பு இரும்புச்சத்து, மினரல்ஸ், பி  காம்பிளக்ஸ், நார்ச்சத்து, கார்போஹைடிரேட் , சிறிதளவு விட்டமின் சி போன்றவை இருக்கின்றன. பிஞ்சு பாகற்காய் சமையலுக்கு நல்லது.