Friday, March 21, 2014

பூச்சிகொல்லி, வளர்ச்சி ஊக்கி இரண்டுமாக செயல்படும் இயற்கை மருந்துகள் - வீட்டுத்தோட்டம் டிப்ஸ்

இரசாயன உரங்களை பொறுத்தவரை பூச்சிக் கொல்லிக்கு என்று தனி மருந்துகளும், பயிர் வளர்ச்சிக்கு என்று வேறு  பொருட்களும் உண்டு. ஆனால் இயற்கை முறைகளை பொறுத்தவரை ஒரே பொருள் இரண்டு விதமாகவும் வேலை செய்யும் என்பது கூடுதல் தகவல்.



இவைகளை உபயோகித்து ,விளைந்த காய்கறிகளை உண்பதால்  நமது ஆரோக்கியம் அதிகரிக்கும். சமையலறை பொருட்களை வைத்தே வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான பூச்சி மருந்துகள் , வளர்ச்சி ஊக்கிகளை  தயார் செய்து கொள்ளலாம்.

* தொட்டிகளுக்கருகில் சிறு சிறு பூச்சிகள் நடமாட்டம் இருக்கும். காய்ந்த முட்டை ஓடுகளை தூளாக்கி சிறிது உப்பு சேர்த்து தொட்டியின் பக்கத்தில் போட்டு வைத்தால் இந்த பிரச்சனை தீரும்.

* தக்காளி இலையில் விஷத்தன்மை உண்டு , அந்த இலைகளை  கசக்கி தண்ணீரில் ஒரு நாள் முழுதும் ஊறவைத்து விட்டு பிறகு இதை செடிகளுக்கு தெளித்தும், ஊற்றியும் வளரலாம். செடி அருகில் பூசிகள் வருவது குறையும், செடியும் நன்றாக வளரும்.

* காபித்தூள் வாசனைக்கும் பூச்சிகள் அண்டாது. காபி தயாரித்ததும் வடிகட்டிய தூளை செடிகளுக்கு போட்டு வரலாம். பூச்சித் தொல்லையும் தீரும், செடியும் நன்கு வளரும்.

* வேப்பிலை இலையை அரைத்து தண்ணீரில் கலந்து செடிகளில் தெளிக்கலாம். இலை, தண்டுகளில் படியும் மாவு பூச்சி கட்டுப்படும்.

* கடைகளில் விற்கும் வேப்பெண்ணெய்யை வாங்கி அதனுடன்  சிறிது பார் சோப் கரைசல் சேர்த்து செடிகளில் தெளிக்கலாம். சோப் நீருக்கு  ஒட்டும் தன்மை இருப்பதால் மருந்து இலைகளில் நன்கு ஒட்டிக் கொள்ளும்.

* பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி மூன்றையும் அரைத்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இவற்றையும் தனித் தனியாகவும் பயன்படுத்தலாம், பலன் ஒன்றுதான்.

* இலைகளை அரிக்கும் பூச்சிகளை கொல்ல மிளகுத்தூள் தூவலாம்.

* பெருங்காயத்தூள் சிறந்த பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது, செடியின் வளர்ச்சிக்கும் உதவும். தூளை அப்படியே தூவியும் வரலாம், தண்ணீரில் கரைத்தும் தெளிக்கலாம். ரோஜா செடிக்கு தெளித்து வந்தால் அதிகமாக  பூக்கள் பூக்கும்.

No comments:

Post a Comment