நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனையும் நம் வீட்டு சமையலறையில் இருக்கிறது. தகுந்த அளவில் தகுந்த முறையில் செய்து சாப்பிட்டு வந்தாலே போதும், எவ்வித நோய்களும் நம்மை அண்டாது. வாசனைக்காக சுவைக்காக என்று மட்டுமல்லாமல் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது இஞ்சி, தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இஞ்சியை பலவிதமாக செய்து உபயோகப்படுத்தலாம். அதில் ஒன்று இஞ்சி பச்சடி. ஊறுகாய் என்றும் கூறலாம்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 100gm
பூண்டு - 5/6 (பல்)
கொத்தமல்லி(தனியா) - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உ.பருப்பு - 1 ஸ்பூன்
து.பருப்பு - 1 ஸ்பூன்
வெல்லம் - 100 gm
வத்தல் - 7
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய் - ஒரு குழி கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை கொஞ்சம்
செய்முறை :
புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக அரிந்து சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து அரைக்கவும். தனியா, வெந்தயம்,கடுகு(பாதி), உ.பருப்பு , து.பருப்பு, வத்தல் அனைத்தையும் லேசாக வறுத்து தூளாக்க அரைக்கவும். பூண்டை தனியாக வறுத்து அரைக்கவும்.
இப்போது ஏற்கனவே அரைத்து வைத்துள்ள இஞ்சி பேஸ்டுடன், அரைத்த பொடியை கலந்து புளித் தண்ணீரை சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து சிறிது வெந்தயம்,பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இஞ்சியுடன் கலந்து வைத்துள்ளவைகளை போட்டு மிதமான தீயில் கிளறவேண்டும். இறுதியாக வெல்லத்தை தூள் செய்து சேர்த்து இறக்கி விடவும்.
இந்த இஞ்சி பச்சடியை மூன்று மாதம் வரை வெளியில் வைத்திருக்கலாம், கெடாது. குளிசாதனப் பெட்டியில் என்றால் ஆறு மாதக் காலம்.
இட்லி, சாதத்துக்கு தொட்டுக் கொள்ள வாசனையான சுவையான அருமையான பச்சடி. அதிலும் தயிர் சாதத்துக்கு மிகவும் பொருத்தமானது. ஜீரணத்துக்கு மிகவும் நல்லது என்பதால் அவசியம் செய்து சாப்பிடவேண்டும்.
No comments:
Post a Comment