Tuesday, March 11, 2014

குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு வைப்பது ஆபத்தில் முடியலாம்!

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும், இவ்வளவும் சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும் முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும்ன்னு இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகள் இன்றைய பெற்றோரால் குழந்தைகள் மீது திணிக்கப்டுகிறது.




தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி, ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்லை?

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள். அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்குவது தவறு. அதன் விளைவை வெகு சீக்கிரம் அனுபவிக்க நேரலாம். வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து! என் குழந்தை எப்படி பேசுறா!? என்பது எல்லா நேரமும் சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.

தன் போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பார்த்தால், அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும்! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள்!! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  குழந்தை செய்வது எல்லாவற்றையும் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மீடியாக்கள் வேறு தன் பங்கிற்கு இந்தக் காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது. சினிமா, தொலைகாட்சி போன்றவற்றை பார்த்து அதில் வருபவர்களைப் போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காதபோது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை, இறுதியில் அடிப்பது என பெற்றோர் மீதே குழந்தைகளுக்கு வெறுப்பை விதைக்கிறார்கள்!.

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால் கைத்தட்டுகள் வாங்குவது தான் முக்கியம் என்பது குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. கிடைக்கும் கைத்தட்டுகளுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்பதை நோக்கித்தான் அவர்களின் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு மற்றவர்கள் புகழ, நல்ல(!) பெயர் எடுக்கவேண்டும் என்று முயலுகிறார்கள். இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சமயத்தில் அது தற்கொலையில் கூட முடிந்துவிடலாம்!.

தேவையற்ற அதிக மன அழுத்தம்:

சில பெற்றோர்கள் பெரிய மகான்கள் பற்றிய புத்தகங்களை கொடுத்து குழந்தைகளை படிக்கச் சொல்வார்கள். அதை விட பெற்றோர்கள் படித்து அதில் குழந்தையின் வயதிற்கு தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லிக் கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்' என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள்!

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள்தான் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர், அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் பெற்றோரிடத்தில் கண்டுக்கொள்ளட்டும். கண்டு, கற்றுக்கொள்ளட்டும், உணரட்டும், பெற்றோரை மதிக்கட்டும்!. நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தையும் என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே!, இவர்களை போன்றவர்களே!! என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிர்த்தாலே போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பெற்றோரிடத்தில் காணமுடியாத நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்?' என்ற கேள்வி எழும்!. பெற்றோரிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது பெற்றோர் மீதான மதிப்பின் சதவீதம் நிச்சயம் குறையும். அரிச்சந்திரன் கதையைக் கேட்டு பின்பற்றி நடந்தது என்பதெல்லாம் அந்தக் காலம். இப்போதைய உலகம் வேறு! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள்!.

எங்கேயோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது என்பதற்காக எல்லா குழந்தைகளையும் வற்புறுத்தி படிக்க வைக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது, எது என்று கண்டு, அந்த வழியில் நடக்க விடவேண்டும். வழிகாட்ட வேண்டும். வழிக்காட்டுவதுடன் நிறுத்திக் கொண்டாக வேண்டும். மாறாக பெற்றோர்கள் தங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்கப் பார்த்தால் ஒடிந்து விடுவார்கள்!.

பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளர்ப்பது முக்கியம். அப்போதுதான் பெற்றோரின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

தயவுசெய்து குழந்தைகளை, குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்!. உலகை தெரிந்துகொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. மூன்றே வருடத்தில் தென்னையை வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல!.

குழந்தையின் வயதுக்கு மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து தன்னம்பிக்கையை இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எரிச்சல், கோபம் , இயலாமை, விரக்தி, சுயபச்சாதாபம் போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள் இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை!?

ஆரோக்கியமான சமூதாயம் ஒவ்வொரு வீட்டிலும் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து, வாழும் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

No comments:

Post a Comment