Monday, March 31, 2014

நெல்லி மரம் பற்றிய அரியத் தகவல்கள்

தனக்குள் பல்வேறு சிறப்புகளை கொண்டது நெல்லி மரம். நெல்லிக்காயை எந்த முறையிலும்,எந்த விதத்திலும் உணவாக, மருந்தாக உபயோகிக்கலாம் என்பது இதன் சிறப்புத்  தன்மை. எதன் கூடவும் சேர்த்து பயன்படுத்தலாம், இயல்பு மாறாது, சத்து குறையாது. தினம் ஒரு காய் மட்டுமாவது உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. ஒட்டுச்செடிகள் என்றால் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் ஆகலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

* நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. மேலும் புரதம், கொழுப்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன

* நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘திரிபலா’ என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.

* உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.

* இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப் பயனுள்ள பகுதியாகும்.சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

* நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம் அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது.

* மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

* நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.

* இது இதயத்திற்கு வலிமையை கொடுக்கிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர்.

* நெல்லிக்காயை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்துக்  கொடுக்க நல்ல பலனளிக்கும்.

* உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

*உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.

இப்படி மேலும் பல நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

கடைகளில் கிடைக்கிறதே என்பதை விட கைகெட்டும் தூரத்தில் இத்தகைய சிறப்பு வாய்ந்த மரம் நம் வீட்டில், தோட்டத்தில், நிலத்தில் இருந்தால் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்பதை எண்ணி இம்மரக்கன்றுகளை வாங்கி நடுங்கள், தெரிந்தவர்களுக்கும் வாங்கி பரிசளியுங்கள். மரம் வளர்ந்து காய்க்கும் சமயத்தில் மருத்துவர் ஒருவர் நம் கூடவே இருப்பதை போல ஒரு நிறைவு கிடைக்கும்.

மரம் வளர்ப்போம்!  வளம் பெறுவோம் !!

No comments:

Post a Comment