Saturday, March 22, 2014

மசாலா பொருட்களின் மருத்துவப் பயன்கள்

நமது உணவில்   மசாலாப் பொருட்களை  சேர்ப்பது வாசனைக்காக மட்டுமல்ல அதில் பல நன்மைகளும்  இருகின்றன என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் சேர்த்து வந்துள்ளனர். 

ஆனால் இவற்றை வெறும் வாசனைப் பொருள், காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருள் என்றுதான் இன்றைய  மக்கள் கருதுகின்றனர். தேவைக்குத் தகுந்தபடி இவற்றை அன்றாடம் நமது உணவில் சேர்த்து வந்தால் நிறைய நன்மைகளைப் பெறலாம்.பட்டை

பிரியாணியின் வாசனையை அதிகரிப்பதில்  இந்த பட்டைக்கு தனி இடம். லேசான இனிப்புத் தன்மைக் கொண்டது. சுவையும் கிடைக்கும்.  பட்டை  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இதனை அவர்கள் சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடுத்து, தேவையான அளவை மட்டும் சுரக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை, இருமல், வயிற்றுப் போக்கு, மோசமான இரத்த சுழற்சி, மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் டென்சன் போன்றவை சரியாகும்.

கிராம்பு

பல் வலி என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கிராம்பு தான். இதை தூள் செய்து வலிக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால் வலி குறையும், கிருமிகள் சாகும். மேலும் அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டோ மற்றும் ஆல்கஹால் அருந்தியோ அவஸ்தைப்படுவோர், ஒரு கிராம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பிரச்னையை  சரிசெய்துவிடும். கிராம்பு வாந்தி, செரிமானப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணமாக்கும். அசைவ உணவுகளில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பொருள். ஜீரணத்தை துரிதப்படுத்தும்.

சீரகம்

அகத்தை சீர் செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயர். உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது. குடிநீருக்கு பதிலாக சீரகத்தை போட்டு கொதித்து ஆறவைத்த தண்ணீரை அருந்தி வருவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சீரகத்  தண்ணீர் அருந்த கொடுக்கலாம். அதுமட்டுமின்றி இது செரிமானப் பிரச்சனை, அனீமியா, இருமல், பைல்ஸ் மற்றும் அதிகமான இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்.

கருப்பு ஏலக்காய்

கருப்பு ஏலக்காய் வேறு, பச்சை ஏலக்காய் வேறு. பொதுவாக இந்த கருப்பு ஏலக்காய் புலாவ் மற்றும் பிரியாணிகளில் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் பிரியாணிகளில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே இந்த கருப்பு ஏலக்காய் சேர்த்தால், அந்த பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் இந்த கருப்பு ஏலக்காய் தொண்டை பிரச்சனை, நெஞ்செரிச்சல், ஈறு பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட வைக்கும். கருப்பு ஏலக்காய் ஆஸ்துமாவால் அவஸ்தைப்படுவோருக்கு நல்ல நிவாரணம் தரும்

குங்குமப்பூ

சருமத்திற்கு  அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரியாணி, இனிப்பு பதார்த்தங்கள் போன்றவற்றில் தான் பயன்படுகிறது. குங்குமப்பூ மிகவும் விலை மதிப்புள்ளது. நன்மைகளும் அதிகம் . மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சீராக வைக்கவும் உதவுகிறது.

ஜாதிக்காய்

இனிப்புகளில் சேர்ப்பார்கள். இதுவும் பல் பிரச்சனை, அல்சீமியர் போன்றவற்றை சரிசெய்வதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இது பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த பொருளும் கூட. பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் பயன்படுகிறது.

மிளகு

நமது உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்த்து சமைப்பது நல்லது.  விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதால் உணவில் கட்டாயம் மிளகு இருக்க வேண்டும். மிளகு உணவுக்கு சுவையையும், காரத்தையும் கொடுப்பதோடு, உடலில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. எத்தகைய காய்ச்சலும் மிளகு ரசம் வைத்து  குடித்தால் குறையும். மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டாலும், மிளகு ஒரு நல்ல தீர்வைத் தரும்.

பெருங்காயம்

ஒரு சிறந்த வாசனைப் பொருளாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனையையும் சரிசெய்துவிடும் தன்மையுடையது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான மலட்டுத்தன்மை, தேவையற்ற கருக்கலைப்பு, குறைபிரசவம், வழக்கத்திற்கு மாறான வலி மற்றும் அதிகப்படியான இரத்தப் போக்கு போன்ற பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. வயிற்றில் அதிக வாய்வு  ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்தூளை வாயில் போட்டு வெந்நீர் குடித்தால் வாய்வு கலையும்.

ஏலக்காய்

இதில்   எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன

மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

சோம்பு

வாய்வு அதிகரித்தால் குடலில் புண்  ஏற்படும், தினமும் உணவில் சோம்பு சேர்த்து வந்தால் குடல் புண் குணமடையும். அஜீரண கோளாறால் வயிற்ருவழி, வயிறு பொருமல் இருந்தால் சிறிதளவு சொம்பை மென்று தின்றால் குணம் தெரியும்.

கருப்பப்பை கோளாறு இருக்கும் பெண்கள் சோம்பை லேசாக வறுத்து தனியாகவோ, பனக்கற்கண்டு சேர்த்தோ சாப்பிட்டு வரலாம். எல்லாவித கருப்பப்பை கோளாறுகளையும் சரி செய்யும் ஆற்றல்  கொண்டது.

ஈரல் பாதிப்பால்  பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும், இதற்கும் சோம்பு சிறந்த நிவாரணி.

சோம்பை நீரிலிட்டு கொதித்தப்பின்  ஆறவைத்து குடித்து வந்தால் உடல் கொழுப்பு கரைந்து எடை குறையும். 

No comments:

Post a Comment