Friday, March 21, 2014

பஞ்சகவ்யா என்னும் அற்புதம்

பஞ்ச கவ்யம் என்பது இயற்கை தாவர ஊக்கி. பசுமாட்டில் இருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்கள் சேர்த்து செய்தது என்பதால் பஞ்ச கவ்யம் என்கிறார்கள்.




பஞ்ச கவ்யம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

புதிய பசு மாட்டு சாணம் ..5 கிலோ
பசுவின் கோமியம் .............3 லிட்டர்
பசும்பால் ...............................2 லிட்டர்
பசும்பாலில் இருந்து எடுத்த தயிர் .....2 லிட்டர்
பசு நெய் ......................................... 500 கிராம் அல்லது ஒரு கிலோ அளவுக்கு ஆமணக்கு விதை
வெல்லம் ...............................500 கிராம்
கரும்புச்சாறு ........................3 லிட்டர்
இளநீர் .....................................3 லிட்டர்
நன்கு கனிந்த வாழைபழங்கள் ........12 (ஒரு டஜன்)
பதநீர் /கள் ......................................2 லிட்டர் .

ஐந்து கிலோ மாட்டு சாணத்தை 500 கிராம் நெய்யுடன் கலந்து ஒரு பிளாஸ்டிக் அல்லது மண் கலனில் வைக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு இந்த கலவையை அப்படியே வைக்க வேண்டும். தினமும் இருமுறை இக்கலவையினை நன்கு கலக்கி விடவேண்டும். (முக்கிய குறிப்பு : வேதி வினை நடக்கும் சாத்தியக் கூறுகளால் உலோக கொள்கலனில் வைக்க கூடாது)

பிறகு ஐந்தாம் நாள் நன்கு காய்ச்சி ஆறவைத்த பசும்பால், கோமியம், நீர் அல்லது கரும்புச்சாறில் கரைத்த வெல்லம், தயிர், நன்கு மசித்த வாழைபழங்கள் இவற்றுடன் இளநீர் சேர்த்து கலக்க வேண்டும். 15 நாட்களுக்கு கலவையே அப்படியே வைத்துவிடவேண்டும்.  நாள்தோறும் இருமுறை இருபது நிமிட நேரத்துக்கு கலவையினை கலக்க வேண்டும். இப்படி கலக்கிவிடுவதன மூலமாக  காற்று உட்புகவும் ,நுண்ணுயிர் செயல்பாட்டுக்கும்  வசதியாக இருக்கும் .

பத்தொன்பதாவது நாள் பஞ்ச கவ்யம் பயன்பாட்டுக்கு தயாராகி இருக்கும் .

ஈ போன்ற பூச்சிகள் புகா வண்ணம் கொள்கலனை நன்கு மஸ்லின் துணியால் கட்டி வைக்க வேண்டும். இல்லாவிடில் முட்டையிட்டு அவை அங்கு பல்கி பெருகிவிடும் .

பயன்படுத்தும் முறை:

10 லிட்டர் நீரில் 200 மில்லி லிட்டர் அளவு பஞ்ச கவ்யத்தை கலந்து தாவரங்களுக்கு தெளிக்கலாம்.

நிலத்துக்கு பயன்படுத்த 10லிட்டர் தண்ணீரில் 1000 மில்லி லிட்டர் அளவு கலந்து பயன்படுத்தலாம்.

பதினைந்து நாளுக்கொரு முறை இக்கலவையினை பயன்படுத்தலாம் .

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் பஞ்சகவ்யம் பயன்படுத்திவருகிறார்கள். இதனை பயன்படுத்தும்போது வேறு இரசாயன உரங்கள் தேவையில்லை.

பயன்கள்:

இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது பஞ்சகவ்யம். வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்கள் இதனை குறைந்த அளவு தயார் செய்து பயன்படுத்தலாம், இது மட்டும் போதும், வேறு உரங்கள் தேவையில்லை.  இதனை தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாம். இதனை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு  இருக்கிறது.  நகரங்களில் மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள் விரும்பிவந்து வாங்கிச் செல்வார்கள்.

No comments:

Post a Comment