Wednesday, March 19, 2014

ஏழை மக்களுக்கு பழங்கள், காய்கறிகளை இலவசமாக வழங்கி வரும் தம்பதிகள்

பொருளாதார பின்னடைவு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் பசுமையான காய் கறிகளும், பழங்களும் மத்திய வர்க்க மக்களே நினைத்தும் பார்க்க முடியாத சூழலில் அகமதாபாத்தை சார்ந்த மோஹித் ஷா மற்றும் அவர் குடும்பத்தினர் தினந்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் ஏழை எளியோருக்கு இலவசமாக விநியோகம் செய்கின்றார்கள்.



கடந்த ஆறு வருட காலமாக 54 வயதான மோஹித் ஷா வும் அவரது மனைவியும் இந்த நற்செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். மோஹித் ஷா ஒரு பிரபல சிமெண்ட் கம்பெனியின் பங்குதாரர் .ஏழைகளுக்கு உணவுப்பொருள் வழங்கும் இந்த எண்ணம் உதிக்க காரணம் இவரது மனைவி கின்னரிபென். இவர் ஒருமுறை காய்கறிகள் விற்பனை அங்காடியில் பொருள்களை  வாங்கும்போது சில ஏழை எளிய  மக்கள் இவரை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அதன் காரணத்தை இவர் வீட்டு பணிப்பெண் விளக்கினார்.   அதன் பிறகு தான் அடித்தட்டு மக்களுக்கு புத்தம் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் என்பது  எட்டாக்கனி என்ற உண்மையை அறிந்தார்.

பின்னர் தனது கணவரிடம் இதை குறித்து ஆலோசித்து, இருவரும் முடிவு செய்த பிறகு ஏழைகளுக்கு இலவசமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை விநியோகிக்க துவங்கி இருக்கிறார்கள். அதுவும் தினந்தோறும்.

ஆரம்பத்தில் வாரத்துக்கு 200 கிலோ வரை விநியோகித்தவர்கள் தற்போது வாரத்துக்கு 1500 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை விநியோகிக்கின்றார்கள். இவர் பக்கத்து நகரத்துக்கு சென்று இவ்வாறு பொருட்களை வாங்கி வருவதை கேள்விப்பட்ட பல விவசாயிகள் போக்குவரத்து செலவை கழித்துவிட்டு விலையை குறைத்தே இவருக்கு இப்பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இந்த விதத்தில்  இவரது நற்பணியில் அவர்களும் பங்கேற்கிறார்கள்.

மோஹித் ஷாவின் 24 வயது மகனும், 21 வயது மகளும் இவர்களுக்கு  துணையாக இருந்து உதவுகின்றனர் . வாரத்தில் மூன்று மூன்று நாட்கள் விநியோகிக்க இவர் தினமும் மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் பெறுமானமுள்ள காய்கறிகளை வாங்குகின்றார். ஏழைகளின் விருப்பமான அப்பளத்தையும் சேர்த்து இலவச உணவாக இவர் அளிப்பதால் இவருக்கு பப்பட் மனிதர் (அப்பள மனிதர் ) என்ற செல்ல பெயரிட்டும் அழைக்கின்றனர் மக்கள்.

முட்டைகோஸ், காரட், முள்ளங்கி திராட்சை, கரும்பு, தக்காளி, ஆரஞ்சு வகை என பல இவர் இலவசமாக விநியோகிப்பவை. இந்த கோடையில் மாம்பழங்களை வழங்க இருக்கிறாராம் இவர். தனது குடும்பத்துக்கு செலவு செய்யும் அதே அளவை இந்த நற் காரியத்துக்கும் செலவிடுகிறார். இவர்கள் இது வரையிலும் பிறரிடமிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றுகொண்டதில்லை. அப்படி யாரும் உதவ முன் வந்தாலும் அவர்களையும் இவ்வாறு தங்களை போல ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்களை விநியோகம் செய்ய கூறுகின்றார்.

இலவச உணவு பொருள் விநியோகம் மட்டுமின்றி இவர் ஏழைகளுக்கு மருத்துவ உதவி, படிக்கும் பிள்ளைகளுக்கு நிதி உதவி, புத்தகம் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கல் என பற்பல வகைகளில் உதவுகிறார்.

இறைவன் எங்களை ஆசிர்வதித்து பிறருக்கு உதவ தேவையான வசதியையும் சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு தந்திருக்கிறார் என்கின்றார் இந்த நல்ல மனிதர்.

ஆண்டுதோறும் பத்து லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள உணவு இவரால் எளியோருக்கு வழங்கப்படுகின்றது .

No comments:

Post a Comment