விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்களால் அங்கீகரிக்கப்படுவதில்லை இதற்கு காரணம் ஆய்வறிக்கை முடிவுகள், எழுத்து மற்றும் செயல்பூர்வமான விளக்கங்கள் ஆகியவை இல்லாததே ஆகும். ஆனால் இவ்வாறான கண்டுபிடிப்புகள் விவசாயிகளின் மத்தியில் மிக குறுகிய காலத்தில் பிரபலமடைந்து அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு சிறந்த சாட்சி ஆகி விடும்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கொடுமுடி கிராமத்தில் உள்ள விவசாயி K. செல்லமுத்து ஆவார் .தென்னை மரத்தில் காய்களை பாதிக்கும் Eriophyd mite எனப்படும் ஒருவகை ஒட்டுண்ணி பூச்சிகளை தடுக்க இவர் ஒரு மூலிகை திரவ தெளிப்பு கண்டுபிடித்து பல அறிவியல் வல்லுனர்களின் கடும் விமரிசனத்துக்கு ஆளானார் .
இந்த மூலிகைத் தெளிப்பு இரசாயன நச்சு கலந்த பூச்சி கொல்லி மருந்துகளைப்போல நமது நிலத்துக்கும், பயிருக்கும், மற்ற உயிர்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த பக்க விளைவையும் தீங்கையும் ஏற்படுத்தாதது என்கின்றார் கொடுமுடியை சேர்ந்த மருத்துவர் மற்றும் இயற்கை விவசாயி Dr. நடராஜன்.
செல்லமுத்து சுமார் மூன்று வருட காலம் நச்சு தன்மை மிகுந்த பூச்சிகொல்லிகளின் விளைவால் பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இரசாயன பூச்சி மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு இவர் ஒரு உதாரணம் என்கின்றார், இவருக்கு வைத்தியம் செய்த மருத்துவர் நடராஜன். இவரது வேலை பூச்சி மருந்துகளை தெளிப்பது . சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் இவர் இப்பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது பகுதியில் மஞ்சள் போன்ற எளிதில் பூச்சி தாக்கும் பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. அவற்றை பாதுகாக்க பெருமளவில் இரசாயன மருந்துகள் தெளிக்கிறார்கள். இந்த மருந்துகள் பல பக்க விளைவை உண்டாக்குகின்றன. சுமார் மூன்று வருடங்கள் பூச்சி கொல்லி மருந்தின் விளைவுகளால் பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்தாராம் செல்லமுத்து.
அவ்வேளையில் பாதிப்பேற்படுத்தாத பூச்சி மருந்துகளை கண்டுபிடிக்க முற்பட்டு தற்செயலாக ஏற்பட்ட ஒரு அரிய கண்டுபிடிப்பு தான் இந்த மூலிகை தெளிப்பு!.
ஒரு கிலோ அளவு சீத்தாபழ இலைகள், பீநாரி சங்கு, மஞ்சள் வேர்க்கிழங்கு, கற்றாழை, நொச்சி இலை, வேப்பம் விதைகள், நீல எருக்கு ஆகியன அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறு எடுக்க வேண்டும். சுமார் ஐந்து லிட்டர் அளவு சாறு கிடைக்கும். இந்த சாறுடன் 15 லிட்டர் அளவு நீர் சேர்த்து கலக்கி இருபது லிட்டர் அளவுக்கு தயார் செய்துக் கொள்ளவேண்டும்.
தென்னை மர உச்சியில் தேங்காய் அறுவடைக்கு பின்னர் தலா இரண்டு லிட்டர் அளவு வீதம் ஒவ்வொரு மரத்துக்கும் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை இதனை செய்ய வேண்டும் இவ்வாறு மூலிகை பூச்சிக் கொல்லி தெளிக்கப்பட்ட இரண்டாயிரம் தென்னை மரங்கள் நல்ல செழிப்புடன் எவ்வித பாதிப்பின்றி இருப்பதாகவும், இதனால் முந்நூறு தென்னை விவசாயிகள் இதனை பின்பற்றி பயனடைந்துள்ளதாகவும் கூறுகிறார் செல்லமுத்து .
தொடர்ந்து இப்படி இந்த கலவையை ஆரம்பத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் பிறகு ஆண்டுக்கு இருமுறையும் தெளிப்பதன் மூலம் ஒட்டுண்ணி பாதிப்பில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்கலாம் என்கின்றார் செல்லமுத்து .
மற்றொரு மூலிகை பூச்சி கொல்லி:
ஒரு கிலோ பூண்டு, அரை கிலோ இஞ்சி, அரை கிலோ புகையிலை, அரை கிலோ பச்சை மிளகாய், இருநூறு கிராம் மிளகு, இருநூறு மில்லி லிட்டர் வேப்பெண்ணெய், முப்பது கிராம் காதி சோப் இவற்றை எடுத்துக்கொள்ல வேண்டும். பூண்டினை முதல் நாள் இரவே நூறு மில்லி லிட்டர் மண் எண்ணெயில் ஊறவைக்கவேண்டும். அதனை அடுத்த நாள் மிளகாய் மற்றும் மிளகுடன் சேர்த்து அரைக்க வேண்டும். புகையிலையை ஒரு நாள் முழுதும் நீரில் ஊறவைத்து வடிகட்டி அத்துடன் வேப்ப எண்ணையை கலந்து வைத்து அதில் அரைத்த பூண்டு மிளகாய் மற்றும் மிளகு கலவையையும் கலந்து அத்துடன் காதி சோப்பையும் சேர்க்க வேண்டும். இதில் சுமார் ஏழு லிட்டர் அளவு கலவை கிடைக்கும். இது ஓர் ஏக்கர் நிலத்துக்கு உபயோகப்படும். பத்து லிட்டர் நீரில் எழுநூறு மில்லி லிட்டர் கலவையினை கலந்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் மிகவும் பயந்த விவசாயிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த ஆரம்பித்து பயன் பெற்றுள்ளார்கள்.
" தற்செயலாய் நிகழ்ந்த அரிய கண்டுபிடிப்பு"
நாம் உணவுக்கு பயன்படுத்தும் பெருங்காயம், பயிர்களின் அதிக விளைச்சலுக்கும் மகசூலுக்கும் உதவுகின்றதாம். இவர் எதேச்சையாக பக்கத்து நிலத்து விவசாயி ஒருவருக்கு வீணாகக் கிடந்த அரை கிலோ பெருங்காயத்தை கொடுத்து அவரது நிலத்தில் வீச சொல்லியிருக்கின்றார். இவர் சாதாரணமாக செய்த ஒன்று எதிர்பாராமல் நன்மை புரிந்துள்ளது. அந்நிலத்தில் விளைந்த சுரைக்காய்கள் பூச்சிகளால் பாதிக்கபட்டிருந்தன .இந்த பெருங்காயம் பூச்சிகளை அழித்து அதிக மகசூலையும் தந்துள்ளது .
இதனையறிந்த பக்கத்துக்கு ஊரைச் சேர்ந்த மற்றொரு விவசாயி தனது இரண்டரை ஏக்கர் மல்லி தோட்டத்துக்கு இதே முறையை பின்பற்ற அவருக்கும் மல்லிப்பூவில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது .
செல்லமுத்து இந்த பெருங்காய மருந்தை நெல், எள், கத்திரி, தக்காளி, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கும் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றார். இவரால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் இந்த பெருங்காய மூலிகை மருந்தை பூச்சிக் கொல்லியாகவும் அதிக விளைச்சலுக்கும் பயன் படுத்துகிறார்கள்.
இவரது இந்த கண்டுபிடிப்பை கோவை வேளாண் பல்கலைகழகம் ஆய்வு செய்து பயிர்களுக்கு பயன்படுத்த இசைவு தந்து வழிமொழிந்திருக்கிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு: திரு. K. Chellamuthu, Karukkamapalayam, Oonchalur Post, Kodumudi via, Erode District, Tamil Nadu, phone: 04204-266127, mobile: 9486602389.
தற்செயலாய் நடந்த நிகழ்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் விவசாயிகளின் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடையும் என்பதற்கு இது ஒன்றே சிறந்த சாட்சி .
No comments:
Post a Comment