Monday, April 20, 2015

வீட்டுத்தோட்டம் - எளிய குறிப்புகள்


முற்றிய தேங்காயை பிளந்து அதில் நாற்று வளர்க்க நார் கழிவு ,உர கம்போஸ்ட் மண் கலந்து சுற்றிலும் கயிற்றால் கட்டி அதில் செடி வளர்த்தல் .

மட்கும் குணமுடையதால் நாற்றுடன் தேங்காய் தொட்டி அமைப்பை நிலத்தில் அப்படியே நடலாம் .
தேங்காய் நார் நீரை தக்க வைக்கும் நீர் ஆவியாதலை தடுக்கும்.* வெயில் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் விடக் கூடாது.

* செடியின் அடி பாகத்தில் தேங்காய் மட்டையை அடுக்கி வைத்து தண்ணீர் ஊற்றினால் நிறைய நேரம் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.

* இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியே வந்தாலும், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசலைத் தெளித்தால் போய்விடும்.

* செடிகள், காய்கறிக் கழிவுகளை செடிகளுக்கு மூடாக்காக போட்டு வைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும் .

* தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன

Tuesday, January 6, 2015

அபாயகரமான ஒரு போதைப்பழக்கம் - ஒயிட்னர் (Inhalant Addiction)

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர்.ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று வருந்துவதில் பயனில்லை.

அபாயகரமான ஒரு போதைப் பழக்கம் - Inhalant Addiction

சிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  Whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பிக்கிறது  இந்த  போதை பழக்கம்..

நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.

ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.

தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.

கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.

13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .

பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் ஆகியோரும்  அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்

* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .

* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane,  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு whitenar போதைத் தன்மை உண்டாக்கும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன.

* தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

* அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம்.

* பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.

இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.

ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் 
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!

என்ன செய்யப் போகிறோம் நாம்??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!

Reference : http://blog.pathfinderclinic.com/2011/03/whitener-addiction-death-by-inhalant.html

Thursday, November 13, 2014

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் குட மிளகாய்

சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது.

இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது.

குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் இதில்  இருக்கிறது.  ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்த நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து:

புரோட்டின் - 0.99 கிராம்.
சக்தி - 31 கலோரி.
சோடியம் - 4 மி.கிராம்.
கொலஸ்ட்ரால் - இல்லை.
கொழுப்பு - 0.3 மி.கிராம்.
தாதுச் சத்து - 6.02 மி.கிராம்.
பொட்டாசியம் - 211 மி.கிராம்.
மெக்னீசியம் - 12 மி.கிராம்.
வைட்டமின் ஏ - 3131 ஐ.யூ.
வைட்டமின் சி - 127.7 மி.கிராம்.
கால்சியம் - 7 மி.கிராம்.
இரும்பு - 0.43 மி.கிராம்.

Monday, November 10, 2014

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு

6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படுகிறது. கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சாக்கடை நீர், முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர், சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு, இரசாயன கழிவு, மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு, தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன சென்றுக் கலக்கின்றன. இப்படி பட்ட கழிவுகள் கலந்த நீர்நிலைகள் மனிதர்கள் குடிக்கவோ விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை. கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில் விளையும் பயிர் மற்றும் காய்கறிகள் பல பக்க விளைவுகள் உண்டாக்குகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.முறையற்ற இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் அதிக அளவு மக்கள் புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடு போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .

காசர்கோடு மற்றும் தக்க்ஷின் கனடா பகுதியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் வான் வழியாக தெளிக்கப்பட்ட எண்டோ சல்பானின் கொடூர விளைவுகளை அறிந்திருப்பீர்கள். பிறவி குறைபாடுகள் மரபணு குறைபாடுகள், புற்றுநோய், கருப்பை சம்பந்தமான நோய்கள், சரும நோய்கள் என மனதாலும் உடலாலும் அங்கு பிறக்கும் பிள்ளைகளும் அவதிப்பட்டதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல பல குழந்தைகளை உருக்குலைத்த பின் கேரளா 2005 ஆம் ஆண்டும் கர்நாடகா 2011 ஆம் ஆண்டும் என்டோசல்பான் பயன்பாட்டை தடை செய்தன!! ஆனாலும் இன்னும் பல இடங்களில் தடைசெயப்பட்ட இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் கள்ள விற்பனையில் இருக்கின்றன என்பதற்கு பீஹார் மதிய உணவில், மோநோக்ரோடோபாஸ் இனால் மரணங்கள் சாட்சி .

வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
-------------------------------------------------

ஒவ்வொரு பொருளிலும் இந்த மருந்து இருக்குமா இல்லை அந்த பூச்சி கொல்லி இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்ய தனி மனிதனால் இயலாது . ஆகவேதான் வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் காலத்தின் கட்டாயம்.

கேரளாவில் அங்கக வேளாண்மை, இயற்கை ஆர்கானிக் உணவு பொருட்களை வீட்டில் வளர்க்க பயிற்சியும், காய்கறி தாவரங்களை கவனிக்கும் முறைகள் அதற்கான தேவையான விதை, செடி வளர்க்க நாற்று பைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கிறார்கள்.

கொச்சி அருகே முண்டம்வெளி பகுதியை சார்ந்த விவசாயத்துறை அதிகாரி ஜான் ஷெர்ரி மாடிதோட்டத்தில் ஐம்பது பைகளில் காய்கறி தோட்டமமைத்து வெற்றியும் கண்டுள்ளார். இசெடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தினையும் தானே வீட்டில் தயாரித்துள்ளார்.

எளிய முறையில் உரம் தயாரிப்பு

1. மாட்டு சாண குழம்பு உரக்கலவை

நிலக் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டு சாணம் ஆகிய அனைத்தையும் தலா ஒரு கிலோ தேவை. இவற்றை ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர் மற்றும் கோமியம் சேர்த்து கலந்து கலனின் வாய் பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும் .இக்கலவை நொதிக்க நான்கைந்து நாட்கள் ஆகும்.

ஐந்து நாட்களுக்கு பின்னர் ஒரு கோப்பை கலவையுடன் பத்து கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் .

2. பாக்டீரியா பூச்சி கொல்லி

சூடோமொனாஸ் எனும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் . ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்று பைகளுக்கு பயன்படுத்தலாம். சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது .

3. மீன் அமினோ அமிலம் உரம்

கடைகளில் கிடைக்கும் மீன் கழிவு மற்றும் வெல்லப்பாகு இரண்டையும் தலா ஒரு கிலோ சேர்த்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு டைட்டாக மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நொதித்தலுக்கு பின்னர். இக்கலவையை வடிகட்டி அதில் இருந்து இரண்டு மில்லி லிட்டர் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து உரமாக பயன்படுத்த வேண்டும். பூக்கும் தாவரங்களுக்கு இவ்வுரம் மிக சிறந்தது .

4. அசாடரக்டின் /Azadaractin...

இது வேம்பிலிருந்து பெறப்படும் சாறு .
இது ஒரு சிறந்த பூச்சி கொல்லி ..இரண்டு மில்லி லிட்டர் சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் இலை மற்றும் வேர் பகுதியில் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

5. இதெல்லாம் போக சில வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

வளரும் செடிகளை அன்போடு பராமரிக்கவேண்டும். நாற்று பைகளை போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும், பைகளை செங்கலின் மீது வைக்கலாம். உரத்தை மாலை நேரங்களில் செடிகளுக்கு இட வேண்டும். .தினமும் காலைவேளையில் நீர்ப்பாய்ச்சி விட வேண்டும்

ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷெரி தொடர்ந்து அதே நாற்று பைகளை பயன்படுத்தி வருகின்றார். இவரது வழிகாட்டுதலால் சூரநிகரையில் 300 தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவரது குடும்பத்தினர் அனைவருமே இவருக்கு இந்த மாடிதோட்ட பராமரிப்பில் மற்றும் ஆலோசனை வழங்கும் விஷயத்தில் உறுதுணையாக உள்ளார்கள். மேலதிக விவரங்களுக்கு அவரைத்தொடர்பு கொள்ள அணுகவும் - 9447185944

மூலம் : தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, November 7, 2014

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குலைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நறுமணம் வீசுவதுடன் உடல் பொலிவுடன் இருக்கும் .

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Saturday, October 11, 2014

நுகர்வோருக்கான முக்கிய உரிமைகள்

பொது மக்கள் ஒவ்வொருவரும் நமக்கான நுகர்வோர் உரிமைகள் என்ன என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. இதை புரிந்து கொள்ள ஒரு சட்ட நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில அடிப்படை விஷயங்களை தெரிந்துக் கொள்வதன் மூலம் நமது பணம் நேரம் போன்றவை மிச்சமாகும், அதே நேரம் நன்மைகளையும் பெறலாம்.* ஒரு பொருளை வாங்கிய பிறகு அது பிடிக்கவில்லை என்று மீண்டும் அதே கடையில் பொருளைத் திருப்பிக் கொடுத்து பணத்தை பெற நமக்கு உரிமையில்லை. எனவே ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பே சரிவர பார்த்து வாங்க வேண்டும், பொருளுக்குரிய விதிகளை நன்கு அறியவும் வேண்டும்.

* ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை நுகர்ருவோருக்கு எப்போதும் இருப்பதில்லை, எனவே ஒப்பந்தத்தை புரிந்துகொள்வது நல்லது. ஒரு வேளை ரத்து செய்யும் உரிமை இருக்கும் என்றால் அதற்கான குறிப்பு ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிடப் பட்டிருக்கும்.

* ஒரு பொருளை உறுதிமொழியுடன் அதாவது வாரண்டியுடன் வாங்கியிருந்தால் அந்த பொருள் தரமானதாக இல்லை என்றால் வாங்கிய நிறுவனத்திலோ அல்லது தயாரித்த நிறுவனத்திடமோ கொடுத்து அதற்க்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

* ஒரு பொருளை அந்த பொருளுக்கென நிர்ணயிக்கப் பட்ட விலையில் நுகருவோருக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் கடைக்காரருக்கு இல்லை, அதே நேரத்தில் அதிகப் பட்ச விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தால் அந்த விலைக்கு அதிகமாக விற்கமுடியாது.

* சில்லறை வர்த்தகங்கள்,  தரம் குறைந்த பொருட்களை கணினி மூலமாக விற்றிருந்தால்  ஏழு நாட்கள் அவகாசத்தை சார்ந்திருக்க முடியாது. நுகர்வோர் சாதாரணமாக மூன்று அல்லது நான்கு வார காலத்திற்குள் அந்த அப்பொருளை திருப்பி கொடுக்க முடியும். அப்பொருள் விற்பனைக்காக கடையில் வைக்கப் படும்போது அது ஒரு அழைப்பிதழாக  சட்டப் பூர்வமாக அறிவிக்கப் படுகிறது. வாங்குபவர்  பணம் கொடுக்கும்போது அந்த விற்பனை ஒரு ஒப்பந்தமடைகிறது. கடை உரிமையாளர் பணத்தை பெற்று  பொருளைக் கொடுக்கும்போது அந்த ஒப்பந்தம் முழுமை பெறுகிறது.

* கார் விற்பனை செய்பவர், திடீரென்று ஆசைப்பட்டு கார் வாங்குவோருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும். அதனால் உணர்ச்சிவசப்பட்டு, கார் வாங்குபவர்களே கவனமாக இருங்கள்.

* நீங்கள் சகல விதிமுறைகளையும் வாசித்து அறிந்து கொண்டீர்கள் என்று கடைக்காரரிடம் தெரியப்படுத்தினால் நீங்கள் விதிகளை வாசித்துவிட்டீர்கள், புரிந்துக் கொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டீர்கள் என்று இந்திய நாட்டின் சட்டம் கருதுகிறது. எனவே பின்னாளில் உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படுமானால் ‘நான் அந்த விதிகளை வாசிக்கவில்லை’ என்று நீங்கள்  மறுக்க முடியாது.

* ஒரு ட்ராவல்  ஏஜென்சி மூலம் நீங்கள் விடுமுறை கால டிக்கெட் எடுத்திருந்தால் அதற்காக கடன் அட்டையை பயன்படுத்தியிருந்தால் அந்த விடுமுறை நிறுவனம் கலைக்கப் பட்டிருந்தால்/வணிக செயல்பாடுகளை நிறுத்தியிருந்தால் அந்த விடுமுறை பயணச்சீட்டு கணக்கில் வராது.  ஏனென்றால்  நீங்கள் ஒரு ஏஜென்டிடம் பணம் கொடுக்கும் போது கிரெடிட் கார்ட் கம்பெனிகள் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை..

* புதிய கார் வாங்கினாலும் பழைய கார் வாங்கினாலும் உங்களுக்கான நுகர்வோர் உரிமைகளில் எந்த மாறுபாடும் இல்லை.

* நீங்கள் ஒரு பொருளை வாங்கும் பொழுது நிறுவன தொழிலாளர்கள் அதை உங்கள் வீட்டிற்கு வந்தும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் அந்த அப்பொருளை கம்பெனிக்கு மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. அதை உங்கள் வீட்டு வாசலில் அவர்கள் சட்டபூர்வமாக வைத்துவிட்டு போகலாம். அல்லது அந்த பொருளை திரும்பவும் கம்பெனிக்கு கொண்டு போவதற்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கலாம்.

மேலும் , முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் வர்த்தக நிறுவனங்கள் ஒரு தடவை விற்ற பொருட்களை  மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கடமை இல்லை. பல கடைகளில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விற்கப்பட்ட பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு தகுந்ததாக இருப்பின் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இது நல்லெண்ண வெளிப் பாடு தானே தவிர சட்டத்தன்மை வாய்ந்த வரைமுறை இல்லை.

Thursday, September 18, 2014

வனதேவதை - சூரியமணி பகத்

இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'மகளிரும் காலநிலை மாற்றமும்' பற்றிய உச்சி மாநாட்டில் பங்கு பெற்றவர்... இவரது  பெயர் சூர்யமணி பகத். இவரது குறிக்கோளும், பணியும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றே, அது என்னவென்றால் காடுகளை பாதுகாப்பது.

இவரது வயது 34, பல வர்ண சேலை, பிளாஸ்டிக் வளையல், நீண்ட கருங்கூந்தலுடன் மிக எளிமையான அமைதியான தெய்வீகக்களை கொண்ட முகத்தை உடையவர்.இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சோட்டா நகர் ஊரை சேர்ந்தவர். சிறு வயதில் ஏழ்மை மற்றும் தந்தையின் வேலை போனதன் காரணமாக பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.  இவரது குடும்பத்தின் நிலை அறிந்த அந்த ஊரில் உள்ள ஒரு நல்ல மனிதர் இவரது குடும்பத்திற்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி பராமரித்திருக்கிறார்.  அம்மனிதரின் உதவியால் சூர்யா மணியும் மீண்டும் பள்ளி சென்று படித்திருக்கிறார். அப்போதே தான் நன்றாக படிப்பதுடன் அல்லாமல் தன்னை போன்று வறுமை நிலையில் இருக்கும் பிறருக்கும் உதவவேண்டும் என்ற உறுதியை மனதில் விதைத்திருகிறார். கூடவே நமது  இயற்கை வளங்களை உயிராய் மதித்து காக்க வேண்டும் என்று உறுதி பூண்டாராம்.

இவர் சமஸ்க்ருத மொழியில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். இவர் படித்த படிப்பிற்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஆனால் இவர் அதை தவிர்த்து காடுகளை பாதுகாப்பதை குறிகோளாக ஏற்றுள்ளார்.

இவர் சிறு வயதில் காடுகளில் சுள்ளி பொறுக்க சென்றால் அங்குள்ள வன பாதுகாவலர்கள் இவர்களை துஷ்ப்ரயோக சொற்களால் விரட்டுவார்களாம். ஆனால் அதே காவலர்கள் திருட்டுத்தனமாக காட்டில் உள்ள  மரங்களை வெட்டி கள்ள சந்தைக்கு அனுப்புவதை பார்த்துள்ளார்.  பிறகு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து இத்தகைய செயல்களை முற்றிலும் தடுத்துள்ளார்.

இவரது 20 வயதில்   ஜார்கண்ட் பகுதி வன பாதுகாப்பு திட்டத்தில் ஆர்வலராக இணைந்திருக்கிறார்

மேலும் அம்மாநில மக்கள் அனைவரும் நில பட்டா இல்லாதிருப்பது கண்டுபிடித்து அனைவருக்கும் அதனைபெற்று தந்திருக்கிறார் .அரசுக்கு வனம் பாதுகாப்பு பற்றி 40 ற்கும் மேற்பட்ட கூற்றுக்கள் சமர்ப்பித்துள்ளார்.

இவரது முயற்சியால் கிராம மக்கள் தாங்களே எல்லையை  நிர்ணயித்து பழ மரங்கள் மற்றும் பல்லுயிர் பயன்பெறும் தாவரங்களை பயிரிட்டுள்ளார்கள் .இதற்குமுன் அரசு வருவாய் தரும் பயிர்கள் மட்டுமே பயிரிட்டதாம்.

மேலும் இவர் கிராமத்தில் டோரங் எனும் பழங்குடி கலாச்சார மையம் ஒன்றையும் துவக்கி உள்ளார். ஊனின்றி உறக்கமின்றி பல நாட்கள் கிராமபுரத்தில் நெடுந்தொலைவு கால்நடையாக நடந்து மக்களுக்கு காடுகள் அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மாவோயிஸ்ட் கூட்டத்தினரை கூட இவர் கடந்து சென்றுமிருக்கிறார். அவர்களால் தடுத்து நிறுத்தப்படும்போது இக்காரியம் மக்கள் நலனுக்கென கூறுவாராம் .

இவர் கூட்டத்தில் குடி மகன்களின் தொல்லையும் இருக்குமாம். அவர்களிடம் சிறிதும் கோபபடாமல் 'சற்று அமருங்கள் கூட்டம் முடிந்த பின் உங்களுக்கு அருந்த ஏதாவது அளிப்போம்' என்று சொல்லி அவர்களை அமைதி படுத்திவிட்டு இவரது உரையை தொடருவாராம்.

ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் துன்புறுத்தல், மற்றும் கேலி பேச்சு எல்லாம் கடந்து இவர் வந்துள்ளார்.

சில நேரம் காவல் துறையினர் கைது செய்ய வரும்போது எங்களோடு ஜெயிலுக்கு 'ஆடு மாடு பிள்ளைங்கள் எல்லாம் வரும்' என்று சொல்லி அவர்களை மிரட்டி அனுப்பிய நிகழ்வுகளும் உண்டு என்கிறார். இவரது கடும் முயற்சியால் யூகலிப்டஸ் மற்றும் அரபி மரங்களை முற்றாக காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டும் நீரை உறிஞ்சி பிற்கால சந்ததிக்கு பாலைவனத்தை  மட்டுமே பரிசாக அளிக்கக்கூடியவை.

காலநிலை மாற்றம், பாலினம் வனப்பாதுகாப்பு அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக பின்னிபிணைந்தவை என்கிறார் சூர்யமணி பகத். தட்பவெப்ப மாற்றத்தால் மருத்துவ குணம் நிறைந்த சில மரங்கள் கால நேரம் தவறி பூக்கின்றன.

காடுகள் மக்களுக்கு இன்றியமையாத வளங்களை தருகின்றன. ஆறுமாதங்களுக்கு உணவுக்கு பயிர்களை நம்பியிருக்கலாம் அடுத்த ஆறுமாதம் காடுகளே மக்களுக்கு வளங்களால் உதவ முடியும் ஆகவே அவற்றை அழிவில் இருந்து காப்பது நமது கடமை என்கின்றார் இந்த வன தேவதை.

இயற்கை வளங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி காப்பதால் இவரை வன தேவதை என்றழைப்பது பொருத்தமாக இருக்கும்